இலங்கையின் பிரதான வைரஸ் பரவலாnக டெல்டா வைரஸ் திரிபு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் தற்போது டெல்டா வைரஸ் பரவி வருவதை அடிப்படையாகக் கொண்டு இதனை கூற முடியுமென விசேட வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தில் திருப்தி அடைந்தாலும், தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதில் தொடர்ந்தும் சிக்கல் காணப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி வகையையும் மாகாண மட்டத்தில் வழங்குவதற்கு பதிலாக, அதன் செயற்றிறனுக்கமைவாகவும் அதிகபட்ச வயதை கருத்திற்கொண்டும் உலக நடைமுறைகளுக்கமைவாக வழங்குவதே முக்கியமானதாகும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் நாட்டில் டெல்டா பிறழ்வு பரவி வரும் நிலையில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நோய் கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதார சேவை இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலைகளின் கொள்ளளவு மட்டம் வரை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.