வன்முறை போராட்டங்களை தொடர்ந்து துனிசியா பிரதமர் பதவி நீக்கம்

துனிசியாவில் நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை அரசாங்கம் தவறாக கையாள்வது தொடர்பாக பல துனிசிய நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந் நிலையில் ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கைஸ் சையத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றம் இடையே அதிகாரங்களை பிரிக்கும் துனிசியாவின் 2014 அரசியலமைப்பிற்கு இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பல நகரங்களில் ஆயிரக்கணக்கான துனிசியர்கள் அணிவகுத்துச் சென்றதுடன் பொலிஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நிலைமைகள் மோசமடைய ஜனாதிபதியின் அரண்மனையில் நடந்த அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியான இந்த அறிவிப்பு, பாராளுமன்றத்தில் மிகப் பெரிய என்னாஹ்தா கட்சி மீது கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.