காதலியை திருமணம் செய்ய நினைத்த காதலன், பெண் வீட்டாரால் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டம் சங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமேஷ் போவி(22). இவர் அதே கிராமத்தில் வசித்து வந்த 20 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குறித்த பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை தனது காதலனுடன் கூறிய அப்பெண்ணிடம், வீட்டைவிட்டு வெளியே வா திருமணம் செய்து கொள்ளலாம் என்று காதலன் கூறியுள்ளார். குறித்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட அப்பெண்ணின் பெற்றோர் அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்த நிலையில், இரவு அனுமேஷ் வெளியே சென்று வீடு திரும்பிய போது மர்மநபர்கள் கத்தியால் தாக்கி அவரைக் கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அனுமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில், காதலியை திருமணம் செய்ய முயன்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த அனுமேஷ் போவியை, இளம்பெண்ணின் குடும்பத்தினர் சிலர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாகி உள்ள இளம் பெண்ணின் குடும்பத்தினரை பொலிசார் தேடி வருகின்றனர்.