கனடா, டெல்டா வகை கொரோனா வைரஸ் மூலம் உருவாகும் நான்காவது கொரோனா அலையை சந்திக்க நேரிடலாம் என கனடாவின் தலைமை மருத்துவ அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில மாகாணங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த திட்டமிட்டுள்ள நிலையில், கொள்ளைநோயின் தீவிரத்தன்மை பெருமளவில் தடுப்பூசியின் அளவைச் சார்ந்தே அமையும் என்று கூறியுள்ளார் கனடாவின் தலைமை மருத்துவ அலுவலரான Dr. Theresa Tam.
தடுப்பூசி போட முயன்றுகொண்டிருக்கும் மக்களுக்கும், கட்டுப்பாடுகள் நெகிழ்த்தலுக்கும் இடையில், நாம் இப்போதைக்கு ஒரு நிலையற்ற தன்மை கொண்ட காலகட்டத்தில் இருக்கிறோம் என்கிறார் அவர்.
அந்த சமநிலை தவறும் பட்சத்தில், பயங்கரமாக பரவும் வைரஸ் பெருமளவில் தொற்றுக்களை ஏற்படுத்துவதை காணவேண்டியிருக்கும் என்கிறார் அவர். நான்காவது அலை, 18 முதல் 39 வயது வரையுள்ளவர்களை தாக்கலாம் என சுகாதாரத்துறை அலுவலர்கள் கருதுகிறார்கள்.
அந்த வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம்பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டுமானால் 80 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி அளித்தாகவேண்டும் என்கிறார் Dr.Theresa Tam.
அப்படிச் செய்தால், மீண்டும் கொரோனா பரவல் உருவாகும் நிலையில், பாதிப்பின் அளவை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கலாம் என்கிறார் அவர்.