ளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து நீரைப் பெறும் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியமைக்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு யாழ் பல்கலைக்கழக பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (31-07-2021) துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தின்போதே, கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு இவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக 2013ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்துக்கு அறிவியல்நகர் பகுதியில் 568 ஏக்கர் காணியைப் பெற்றுத்தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பின்னர், பல்கலைக்கழக வளாகத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுப்பதற்காக, பல்கலைக்கழகத்துக்குப் பின்புறமாக இருக்கும் புலிக்குளத்தைப் புனரமைத்து, அங்கிருந்து வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவரும் திட்டத்தை சாத்தியப்படுத்த ஏற்பாடு செய்திருந்தார்.
யாழ் பல்கலைக்கழகம் சார்பில் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
சுமார் 80 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட இந்தத் திட்டத்தை, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களிடம் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்துதவற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக கடந்த 13ம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் ஆகியோருடன் நடாத்தியிருந்தார்.
இதன்போது, புலிக்குளத்தை அண்மித்ததாக இருக்கும் சுமார் 150 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலத்தையும் அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கே வழங்கவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்பிரகாரம் முதல் கட்டமாக 15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு குளத்திலிருந்து நீரை எடுத்துச் செல்வதற்கான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் திரு.ராஜகோபு ஊடாக பணிகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தலைமையில் அண்மையில் குளப்புனரமைப்புப் பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விவசாயபீடம், பொறியியல்பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவை பயனடையவிருப்பதுடன், விவசாயபீடத்தின் விவசாயச் செயற்பாடுகளுக்கும் அது வரப்பிரசாதமாக அமையவிருக்கிறது.
இவ்வாறு, அறிவியல்நகர் பல்கலைக்கழகத்துக்கு புலிக்குளத்திலிருந்து நீரைப் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தந்ததுடன், மேலதிகமாக 150 ஏக்கர் காணியையும் பெற்றுத்தந்தமைக்காகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அவரது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளரும், பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கோ.றுஷாங்கனுக்கும், துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தலைமையிலான யாழ் பல்கலைக்கழக பேரவை இன்றையதினம் நன்றி தெரிவித்திருந்தது.