தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த மோகன், ஓசூர் அடுத்த சொர்னபூமி லே அவுட் பகுதியில் மனைவி, மகள் மற்றும் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கு முன் கிருஷ்ணகிரியில் சொந்தமாக லாட்ஜ் நடத்தி வந்த மோகன், தற்போது ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தனது தொழிலை மேம்படுத்த வங்கியில் கடன் வாங்கிய மோகன், பிறகு அந்த கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அத்தோடு, தொழிலிலும் போதிய வருமானம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, கீழ் தளத்திலுள்ள படுக்கை அறையில் மோகனின் தாயார் வசந்தா சடலமாக கிடந்துள்ளார்.
மேல் தளத்திலுள்ள படுக்கை அறையில் மனைவி ரம்யா, மகள் அன்மயி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். மோகன் அதற்கு அருகிலேயே தலை முழுவதும் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டி.எஸ்.பி. தலைமையிலான பொலிசார் நால்வரின் சடலங்களையும் மீட்டனர். அத்தோடு வீட்டில் இருந்து மோகன் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார், அதில் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
வசந்தா, ரம்யா, அன்மயி ஆகிய மூவரும் விஷம் அருந்தியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். தாய், மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு மோகன் தலையில் பாலிதீன் கவரை சுற்றிக் கொண்டு சினிமா பாணியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே, தொழில் சம்பந்தமாக எந்த தகவலையும் மோகன் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளமாட்டார் என உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.