இந்தியா தனது நான்கு யுத்தக் கப்பல்களை தென் சீனக் கடற்பகுதிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சுமார் இரண்டு மாதங்கள் வரை அந்த யுத்தக்கப்பல்கள் தென்சீனக் கடற்பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
இந்தியாவின் யுத்தக்கப்பல்கள் தென் சீனக் கடற்பரப்பிற்கு அனுபப்பட்டால், இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையில் இருந்துவருகின்ற முரன்பாடுகள் மேலும் அதிகமாகும் என்று எச்சரிக்கின்றார்கள் போரியல் நோக்கர்கள்.
இலங்கையில் தனது கால்களைப் பரப்புவதன் ஊடாக இந்தியாவின் தென் பகுதியை தனது கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டுவருவதற்கான சீனாவின் நகர்வுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் திடீரென்று சீனாவின் தென் கடலுக்கு தனது போர்க்கப்பல்களை அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது இந்தியா.
இந்தியாவின் Guided missile destroyer மற்றும் Missile frigate ரக போர்க் கப்பல்கள் உட்பட நான்கு போர்க் கப்பல்களை தாம் தென் சீனக் கடற்பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா ஒஸ்ரேலியா மற்றும் ஜப்பான் போன்றனவற்றின் கடற்படைகளுடன் இணைந்து இந்தியப் போர்க்கப்பல்கள் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 200 பில்லியன் டொலர்ஸ் பெறுமதியான வர்த்தகம் இந்த தென் சீனக் கடற்பரப்பின் ஊடாகவே நடைபெற்று வருவதால், அந்த வர்த்தக நடவடிக்கைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் தனது கடற்படையை அங்கு அனுப்பி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
‘1991ம் ஆண்டு உலகின் மிகப் பெரிய பனிப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில், இந்தியா தனது கவனத்தை முழுமையாக வர்த்தக மேம்பாட்டை நோக்கி திருப்பியிருந்தது. அதன் காரணமாக தெற்காசிய நாடுகளுடன் நட்புறைவைப் பேணிய இந்தியா அந்த நாடுகளுக்கு வர்த்தகக் கப்பல்களை அனுப்பி வைத்தது. ஆனால் அதேவேளை சீனாவோ யுத்தக் கப்பல்களையே இந்தியாவை நோக்கி அனுப்பியிருந்தது’- இவ்வாறு குறிப்பிடும் இந்திய ஊடகங்கள், சீனாவை நோக்கி தனது நேசக்கரத்தை நீட்டிய இந்தியா மூன்று தசாப்பதங்களின் பின்னர் சீனாவுக்குப் புரியக் கூடிய மொழியில் பதிலளிக்கத் தீர்மாணித்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
இந்தியாவை நிலம் வழியாகவும், கடல் வழியாகவும் சுற்றிவழைக்க சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்தியா தென் சீனக் கடற்பகுதிகளில் தனது போர்க்கப்பல்களை பணியில் ஈடுபடுத்த தீர்மாணித்துள்ளதாகவும் இந்திய நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் முதல் அமெரிக்காவின் USS Ronald Reagan என்ற பாரிய யுத்தக்கப்பல் தலைமையில் U.S. aircraft carrier group தென் சீனக் கடற் பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் பிரித்தானியாவின் HMS Queen Elizabeth என்ற பாரிய விமானந்தாங்கி கப்பலும் இந்த வாரம் முதல் தென் சீனக் கடற்பரப்பின் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் போர்ப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது.
அதேபோன்று ஒஸ்ரேலிய மற்றும் ஜப்பான் கடற்படைகளும் Guam கடற்பகுதிகளில் போர் ஒத்திகைகளில் ஈடுபட உள்ளன.
இந்தக் கடற் படைகளுடன் இந்தியப் போர்க்கப்பல்களும் இணைந்து சீனா உரிமை கொண்டாடிவரும் கடற்பகுதிகளில் போர் ஒத்திகைகளில் ஈடுபடுவதென்பது, மிகப் பெரிய எச்சரிக்கைச் செய்தியை சீனாவுக்கு வழங்கும்படியாக இருக்கும் என்பதுடன், பெரும் போர் பதட்டத்தை தென் சீனக் கடற்பரப்பில் மாத்திரமல்ல சீன- இந்திய எல்லைகளிலும் ஏற்படுத்தவிடும் என்றும் கூறுகின்றார்கள் போரியல் ஆய்வார்கள்.
இந்தியாவின் யுத்தக்கப்பல்களால் தென் சீனக் கடற்பரப்பில் ஏற்படுத்தப்படும் அதிர்வலைகள் இலங்கை துறைமுகங்களிலும் தொடரும் என்பதிலும் சந்தேகம் இல்லை.