கொரோனா தொற்றினால் அப்பாவி மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு நாட்டை முழுமையாக மூடும்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
COVID-19 தொற்றினால் ஏற்படுகின்ற மரண வீதங்களை மூன்று இலக்கங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டுமென்றால் விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அமுல்படுத்த வேண்டும் என்றும், அதற்கமைய நாடு தற்போது பொது முடக்கத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முகநூலில் கடிதமொன்றைப் பதிவிட்டு இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதில், மூன்று இலக்கங்களுடன் மரண வீதத்தை மட்டுப்படுத்துவோம். உங்களது பிடிவாதத்தினால் டெல்டா தொற்று தற்போது இலங்கையை துரதிஷ்டவசமாக மூழ்கடிக்கின்றது.
செப்டம்பரில் நாளொன்றுக்கு 04 இலக்க எண்ணிக்கை கொண்ட மரணங்கள் கூட ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன்காரணமாக குறைந்தது இரண்டு வாரங்களுக்காகவது நாட்டை முடக்கவும். pfizer-moderna போன்ற பலமான தடுப்பூசிகளின் இரண்டாம்கட்ட தொகையை நாட்டு மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதில் பதிவிட்டுள்ளார்.