கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. இந்த தழும்பை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெரும்பாலான வேலைகள் கணினி சார்ந்த டிஜிட்டல் திரைகளின் வழியாகவே நடக்கின்றன. இது தவிர பெரும்பாலானோர் தங்கள் பொழுதுபோக்குகளுக்கு இணையதளங்களையே சார்ந்திருக்கிறார்கள். அதனால் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. அவைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
கண்ணாடிகள் அணிவதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அப்படி கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு கற்றாழையை பயன்படுத்தலாம். கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி ஜெல்லை எடுத்து வடுக்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.
உருளைக்கிழங்கு சாறையும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் கேடகோலேஸ் எனும் நொதி சருமத்தை பிரகாசமாக்கவும், கருமையான புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாற்றை பஞ்சில் முக்கி தழும்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடவ வேண்டும். வாரத்திற்கு நான்கு முறை செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையத் தொடங்கும்.
வெள்ளரிக்காயும் தழும்புகள் மறைவதற்கு உதவும். அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வடுக்கள் இருக்கும் பகுதியில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் வடுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மூக்கு பகுதியை சுற்றி அடுத்தமாக தடவ வேண்டும். அப்போது மூக்கு பகுதியில் குளிர்ச்சி தன்மையை உணர முடியும். குளிர்ச்சி நீங்கியதும் முகத்தை கழுவி விடலாம்.