நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வெளியானதையடுத்து இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகை மீராமிதுனுவை கைது செய்யக்கோரி மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தது.
நடிகை மீராமிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமீதுன் மீது சாதிய வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கு சம்மந்தமாக நேரில் ஆஜராக கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீராமிதுனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். விசாரணைக்கு ஆஜராகததால் போலீசார் நேற்று கேரள மாநிலத்தில் வைத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் நடிகை மீரா மிதுன் ஈடுபட்டார். தொடர்ந்து கூச்சலிட்ட வண்ணமே இருந்தார்.
போலீசார் அழைத்து வரும் போது நடிகை மீரா மீதுன் தெரிவிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு எந்த உணவும் போலீசார் தரவில்லை. என்னுடைய வழக்கறிஞர் வரும்வரை நான் பேச மாட்டேன்.” என்று நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை மீரா மிதுனுக்கு வீடியோ எடுத்துக்கொடுத்தது உள்ளிட்ட புகார்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.