நீரிழிவு நோயாளிகள் கண் தானம் செய்யலாமா?! வெளியான தகவல்!

தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது.

ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்து பாதுகாக்க வேண்டும்.

கண் தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண் தான வங்கியை அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண் தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கண் தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும் வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.

இறந்தவர் உடல் உள்ள அறையில் மின் விசிறியை அணைத்துவிட வேண்டும். கண் தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண் தானம் செய்யலாம்.

புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சு கிருமி தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியாது. இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களை கொண்டு இரண்டு பார்வையிழந்தவர்களுக்கு பார்வை கொடுக்க முடியும்.

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது.

நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்த சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி? உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ யாராவது இறக்க நேரிட்டால், கண் தானம் செய்வதன் அவசியம் குறித்து எடுத்துக்கூற வேண்டும்.

மாண்டு போனவரை மீண்டும் இந்த உலகத்தை பார்க்க வைக்க, கண் தானத்தை தவிர வேறு மிகச் சிறந்த வழி ஏது?