கொரோனாவை இல்லாதொழிக்க 2 880 நேர‌ மகா யாகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

உலக நன்மைக்காக சக்திவேதா ஆரோக்ய மிஷன் சார்பில் இந்தியாவின் பெங்களூரில் 2,880 மணி நேரதொடர் மகா யாகம் தொடங்கப்பட்டுள்ளது.

யாகம் தொடங்கும் முன்பு இதுகுறித்து சக்திவேதா ஆரோக்ய மிஷனின் இயக்குநர் மாதாஜி ஸ்ரீபிரியா கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்று பேராபத்தின் காரணமாக உலகமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையிலும் பருவநிலை மாற்ற பாதிப்பு, நாடுகளுக்கிடையே மோதல், மனிதர்களுக்கிடையே நட்பின்மை, உறவுகளில் விரிசல் என ஏராளமான பிரச்சினைகள் மேலோங்கி இருக்கின்றன.

எனவே ஒட்டுமொத்த உலக நன்மைக்காகவும், கொரோனா நெருக்கடியின் பாதிப்பை குறைப்பதற்காகவும், சுற்றுசூழலை தூய்மைப்படுத்துவதற்காகவும், மனிதர்களுக்கிடையே சகோதரத்துவம் மேம்படுத்துவதற்காகவும் மகா யாகத்தை மேற்கொள்கிறேன்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த யாகமானது வரும் டிசம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ச்சியாக 2,880மணி நேர‌ம் மகா யாகம் நடைபெறும் என்றும் கூறினார்.

அப்போது மஹா திரிபுரசுந்தரி அம்மாவுக்கு 108 மூலிகைகளில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்களை ஓத உள்ளதாகவும், . உலகின் மிக நீண்ட யாகமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த யாகத்தை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தயாகத்தில் மக்கள் ஜூம் செயலி மூலமாகவும் நேரிலும் பங்கேற்கலாம் எனவும் கூறிய அவர், பெங்களூருவை அடுத்துள்ள ஜிகினி சக்திவேதா ஆரோக்கிய மிஷன் மையத்துக்கு நேரில் வரவிரும்புவோர் 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டுவருது அவசியம் என்றும் தெரிவித்தார்.