நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதையடுத்து இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நடிகை மீரா மிதுனுவை கைது செய்யக்கோரி மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசிக, திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
நடிகை மீராமீதுன் மீது சாதிய வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழக்கு சம்மந்தமாக நேரில் ஆஜராக கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகததால் போலீசார் கேரள மாநிலத்தில் வைத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை மீரா மிதுனுக்கு வீடியோ எடுத்துக்கொடுத்தது உள்ளிட்ட புகார்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஆகியோர், தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களின் அந்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நான் பேசியபோது, வாய்தவறி குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைப் பற்றி பேசி விட்டேன் என்றும், பல படங்களுக்கு நான் கால்சீட் கொடுத்து உள்ள காரணத்தினால்m தயாரிப்பாளர்களுக்கு என்னால் நஷ்டம் ஏற்படும் என்றும் அந்த ஜாமீன் மனுவில் நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.