திரையரங்குகள் மீண்டும் திறப்பு!

ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்ற சார்பட்டா பரம்பரை, நெற்றிக்கண் போன்ற படங்களை திரையரங்கில் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், தற்போது 4 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இரு தினங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடபட்டதால், புதுப்படங்கள் எதுவும் இன்று ரிலீசாகவில்லை. மேலும் இன்று குறைவான அளவிலேயே திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

அக்‌ஷய் குமார் நடித்துள்ள இந்தி படமான ‘பெல்பாட்டம்’, ஹாலிவுட் படமான ‘காட்ஸில்லா vs கிங்காங்’, சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட படங்கள் மட்டுமே இன்று திரையிடப்பட்டுள்ளன. இதில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இனி வரும் வாரங்களில் ரிலீசுக்கு காத்திருக்கும் சின்ன படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அப்போது இயல்பு நிலை திரும்பும் என திரைத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்ற சார்பட்டா பரம்பரை, நெற்றிக்கண் போன்ற படங்களை திரையரங்கில் வெளியிடுமாறு சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.