வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற நபர் வைத்தியசாலையில் தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு இருந்த போதே கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஓன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (23.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்து எடுப்பதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார்.
அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவதற்காக தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபராவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.