கட்டிப்பிடித்தல்: சுகமும்.. சூடான விவாதங்களும்..

கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை.

மனித இனம் தனது உணர்வுகளை பிடித்தமானவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வழிமுறையாக கட்டிப்பிடித்தலை கொண்டாடுகிறது. மகிழ்ச்சி, துக்கம் இந்த இரண்டிலும் இது முக்கியபங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த உலக தலைவர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை கட்டிப்பிடித்தலை கையாண்டுகொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் அதை பற்றிய விவாதங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பாசமான இந்த விஷயத்தை, ஆபாசமாகவும் கருதுவதுதான் விவாதத்திற்கான காரணம்.

பள்ளி ஒன்றில் மாணவர்கள் கலைவிழா நடந்துகொண்டிருந்தது. ஒரே பள்ளியில் பிளஸ் – ஒன் படிக்கும் மாணவியும், பிளஸ்-டூ படிக்கும் மாணவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்கள். போட்டியில் கிடைத்த வெற்றி தந்த திடீர் மகிழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அதை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, இருவரும் பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயத்தை மாணவனின் பெற்றோர் சிறுவர்களுக்கான உரிமை கமிஷனில் புகாராக பதிவு செய்தார்கள். கமிஷன், மாணவருக்கு ஆதரவாக செயல்பட்டது. உடனே பள்ளி நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடுத்தது.

‘போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தவே கட்டிப்பிடித்தேன்’ என்று மாணவர் சொன்னார். ‘அப்படியில்லை.. அது அழுத்தமான கட்டிப்பிடித்தலாக இருந்தது. அது பள்ளியின் ஒழுக்க நெறி முறைகளுக்கு எதிரானது’ என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. நீதிமன்றமும் பள்ளியின் கருத்துக்கு செவிசாய்த்தது. விவாதம் நீண்டுகொண்டே போக, பள்ளி அமைந் திருக்கும் தொகுதியை சேர்ந்த பிரபலமான எம்.பி. அதில் தலையிட்டார். அதை தொடர்ந்து மாணவி பள்ளியில் சேர்க்கப்பட்டார். மாணவரும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் பி.பி.சி. டெலிவிஷன் வரை விவாதப் பொருளாக மாறியது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.

‘கட்டிப்பிடிப்பது அன்பானது.. அது மேஜிக் போன்று மனதில் பல்வேறு நல்ல மாற்றங்களை உருவாக்கக்கூடியது’ என்று ஒரு சாராரும், ‘அப்படி அதற்கு அபூர்வ சக்திகள் இருந்தாலும், அது ரகசியமாக செய்ய வேண்டிய விஷயம்ங்க..’ என்று இன்னொரு சாராரும் கூறி, கட்டிப்பிடித்தல் விவாதத்திற்கு கணிசமாக எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

“கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. பிரித்துப் பார்க்கும் அளவுக்கு விவரம் இல்லாதவர்கள் இதை பற்றி பேசும்போதுதான் பிரச்சினை உருவாகிறது” என்கிறார், கல்லூரி மாணவி ரம்யா.

சினிமாவுக்கு வெளியே கட்டிப்பிடித்தலால் அதிக விமர்சனத்தில் சிக்கிக்கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். அவர், “இந்த விஷயத்தில் ஆட்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது. அது பற்றிய விவாதம் என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. எனக்கு ஒருவரை பிடித்தால் நான் அவரை கட்டிப் பிடிப்பேன். அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதை நான் மகிழ்ச்சியோடு செய்வேன். கடவுள் நமக்கு கைகளை தந்திருப்பது மற்றவர்களை கட்டிப்பிடிக்கத்தான் என்று நான் நினைக்கிறேன். கட்டிப்பிடித்தல் மூலம் நமது அன்பை நாம் இன்னொருவருக்கு புரியவைக்கவேண்டும். அன்புக்கு பாலின வேறுபாடு கிடையாது. எனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நான் அன்பை வெளிப்படுத்துவேன். நமது தொட்டால்சிணுங்கி சமூகம் இந்த சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக்கிவிடுகிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த கட்டிப்பிடித்தல் விஷயத்தில் அதிகம் வாங்கிக் கட்டிக்கொண்டவர் பாரதிய ஜனதா கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா. நேருஜி தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டையும், அவரது மகளையும் கட்டிப்பிடிக்கும் படத்தை வெளியிட்ட மாளவியா, அதை பற்றி மோசமாக கருத்தும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு நாடு முழுக்க இருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன.

கட்டிப்பிடித்தலிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. அது உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் வித்தியாசங்கள் இருக்கின்றன. அம்மாவும்- மகளும், கணவனும்- மனைவியும், காதலனும்- காதலியும், நண்பனும்- தோழியும், தோழியும்- தோழியும்.. இப்படி உறவுக்கும், உணர்வுக்கும் தகுந்தபடி கட்டிப்பிடித்தல்கள் இருக்கின்றன.

மக்கள் தொடர்பு பணியில் இருக்கும் பெண்மணி ஒருவர், “நெடுநாள் பிரிந்திருந்த நண்பர் ஒருவரை திடீரென்று பார்க்கும்போது நான் ஓடிச்சென்று அவர் கைகளை பற்றிப்பிடித்துக்கொள்வேன். இது என் வழக்கம். இப்படி நான் அன்பை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. கட்டி அணைத்தலை பொறுத்த வரையில் நமக்கு விருப்பம் இருந்தால்தான் இன்னொருவர் கட்டிப் பிடிக்க அனுமதிப்போம். இருவருக்கும் பிடித்திருந்தால்தான் அது ஆரோக்கியமான அணைப்பு..” என்கிறார்.

கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலையிலும் நம்மில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கட்டிப்பிடிக்க யாரும் கிடைக்காதபோது, தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குகிறார்கள். எல்லோருக்கும் யாரிடமிருந்தாவது கட்டிப்பிடித்தல் அனுபவம் கிடைத்திருக்கத்தான் செய்யும். ஆனால் அனைவருக்கும் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

இந்த கட்டிப்பிடித்தலின் சரித்திரம் எங்கிருந்து எப்படி தொடங்கியிருக்கும்?

இரண்டு எதிரிகளிடமிருந்துதான் இது தொடங்கியிருக்கும் என்கிறார்கள். எதிரிகள் இருவர் சந்தித்துக்கொள்ளும்போது தாங்கள் ஆயுதம் எதையும் மறைத்துவைத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்த்த ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். ஆயுதம் இல்லை.. அன்புதான் இருக்கிறது.. என்பதை காட்டவே இப்போது உலகத் தலைவர்கள் பலர் ஆரத் தழுவிக்கொள்கிறார்கள். நமது பிரதமர் நரேந்திர மோடியும் உலகத் தலைவர்களோடு அன்பு பாராட்ட கட்டிப்பிடிப்பது, பலரையும் கவர்ந்திருக்கவே செய்கிறது.

கட்டிப்பிடித்தலிலும் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நடிகர் ஜாசன் டிட்டர், தி வியூ என்ற பேச்சரங்கத்தில் ஒரே நிமிடத்தில் 86 முறை கட்டிப்பிடித்தார். அதற்கு முன்பு 79 முறை தழுவியதே உலக சாதனையாக இருந்தது. அதனை இவர் முறியடித்துவிட்டாலும், 60 வினாடிகளில் 100 பேரை கட்டிப் பிடித்துவிடவேண்டும் என்று தீர்மானம் போட்டிருந்தார். 86 பேரிலே, நேரம் முடிந்துவிட்டது என்றாலும் மீதி 14 பேரையும் ஏமாற்றாமல் கட்டிப்பிடித்தார்.