முல்லைத்தீவில் நேற்று வரை 1,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 578 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளதாகவும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவில் 578 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் தற்போது வரை 15 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. 784 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதனை விட தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான 2,000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஏனைய கொடுப்பனவுகள் பெறுபவர்களை தவிர்த்து 8,553 குடும்பங்கள் இந்த கொடுப்பனவுகளை பெற தகுதி பெற்றுள்ளார்கள்.
இதுவரை மாவட்டத்திற்கு கிடைத்த நிதி 5 மில்லியன் ரூபாவில் 2,500 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். இன்னும் 12.1 மில்லியன் மேலதிக நிதி கோரியுள்ளோம் நிதி கிடைத்தவுடன் அதனையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இருக்கின்ற வேளையிலும் மக்கள் இன்னும் கவனயீனமாக அன்றாட வேலைக்கு செல்வதாக கூறி தேவையில்லாத விடயங்களை மேற்கொள்வதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். மக்கள் நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு அவதானமாக செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்..