ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக உற்சாகத்துடன் வானைநோக்கி துப்பாக்கிசூடு நடத்தி தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இறுதி இராணுவவிமானம் காபுல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுச்சென்றதை தொடர்ந்து – ஆப்கானில் அமெரிக்காவின் 20 வருட கால சர்ச்சைக்குரிய பிரசன்னம் முடிவிற்கு வந்துள்ளது. சி-17 விமானம் தூதுவர் ஒருவருடன் காபுல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ம் திகதி காலக்கெடு முடிவடைந்த பின்னரும் வெளியேற முடியாதவர்கள் வெளியேறுவதற்கு தூதுவர் அலுவலகம் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இறுதி விமானம் புறப்பட்ட பின்னர் தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அதனை கொண்டாடியுள்ளனர்.
இதன் மூலம் தலிபான் காபுலை கைப்பற்றிய பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பாரிய வெளியேற்றும் நடவடிக்கையும் முடிவிற்கு வந்துள்ளது. நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் நாளாந்தம் 7500 பேர் என்ற அடிப்படையில் 123,000 பொதுமக்களை வெளியேற்றியதாக அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கையை பாரிய மனிதாபிமான இராஜதந்திர இராணுவநடவடிக்கை என வர்ணித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டொனி பிளிங்டன் ( Anthony Blingen) அமெரிக்கா மேற்கொண்ட மிகவும் சவாலான நடவடிக்கை என வர்ணித்துள்ளார்.
புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது இராணுவநடவடிக்கை முடிவிற்கு வந்துள்ளது, புதிய இராஜதந்திர நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தலிபான் தனக்கான நியாயபூர்வ அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்,என தெரிவித்துள்ள இராஜாங்க செயலாளர், பொதுமக்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளிற்கு பயணம் செய்ய அனுமதிப்பது,பெண்கள் உட்பட அனைவரினதும் உரிமைகளை பாதுகாப்பது, நாட்டில் பயங்கரவாத அமைப்புகள் காலூன்றுவதை தடுப்பது ஆகிய விடயங்கள் குறித்த தனது உறுதிமொழிகளை தலிபான் எவ்வாறு நிறைவேற்றுகின்றார்கள் என்பது அவதானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.