கொரோனாவால் வீடுகளில் மரணிப்போர் தொகை அதிகரிப்பு….

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் வேகமும் அதேபோன்று மரணிப்பவர்களும் நாளாந்தம் அதிகரித்துச் செல்கிறது.

இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பால் அரச வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து கொரோனா நோயாளிகள் அவர்களது வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கப்படும் நோயாளர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்குவந்த வாரத்தில் 194 பேர் வீடுகளில் உயிரிழந்ததாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கொரோனா உயிரிழப்புகளில் 76.6 வீதமாக இது பதிவாகியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான ஒருவார காலத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகி 99 பெண்களும் 95 ஆண்களும் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 1,094 பேர் வீடுகளில் உயிரிழந்திருக்கின்றனர். மொத்த மரணங்களில் 13.1 வீதம் வீடுகளில் இடம்பெற்றுள்ளன என தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.