மைத்திரியின் தம்பி திடீர் முடிவு! தடுமாறும் ஜனாதிபதி….

நாட்டில் அரிசி விலைக்கு கட்டுப்பாடு விதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள காரணத்தால் விரைவில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள அரசாங்கம் கீரி சாம்பார் 125 ரூபாவிற்கும் சிவப்பு மற்றும் வெள்ளை சம்பா 103 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. அத்துடன் சிவப்பு அல்லது வெள்ளை நாடு 98 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவப்பு அல்லது வெள்ளை பச்சை அரிசி 95 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு காரணமாக அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒன்றுகூடி கடுமையான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் உள்ள பெரியளவு அரிசி ஆலை உரிமையாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் அரலிய அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் அவசர சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்ய முடியாது எனவும் அவ்வாறு செய்தால் நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில் அரசாங்கம் தமது முடிவில் மாற்றத்தை செய்யாவிட்டால் கொரோனா வைரஸ் நிலைமையை காரணம் காட்டி அனைத்து அரிசி ஆலைகளையும் இழுத்து மூடி சேவையாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அரிசி உற்பத்தியை இடைநிறுத்தி வைக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயம் குறித்து தகவல் அறிந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, டட்லி சிறிசேனவிடம் தொலைபேசி அழைப்பு எடுத்து இதுகுறித்து வினவியுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள டட்லி சிறிசேன அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்ய முடியாது என அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர்களுடைய தீர்மானத்தில் நிலையாக இருக்க வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

எனினும் சிறிது காலத்திற்கேனும் அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்த டட்லி சிறிசேன முடிந்தால் அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரியுள்ளார்.

இல்லையே நாடு அரிசி விலையில் நிவாரணம் வழங்குமாறு டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்கச் சென்று வியாபாரத்தை அழித்துக் கொள்ள முடியாது என ட்டலி சிறிசேன ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தை கஷ்டத்தில் தள்ளிவிட வேண்டாமென ஜனாதிபதி, டட்லி சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுவரையில் அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உட்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி, டட்லி சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் அரிசிக்கு விலை நிர்ணயித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்த போதும் அரிசி விலையை தீர்மானிக்கும் நபர்களாக அரிசி ஆலை உரிமையாளர்களே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதில் டட்லி சிறிசேன பிரதான பங்கு வகித்தமை விசேட அம்சமாகும். எனவே இந்த நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

அரிசித் தட்டுப்பாட்டை தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெற வேண்டும் என்பது அரிசி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் தம்பியின் இம் முடிவு ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அரசியல் ரீதியில் பாரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.