அஜித், விஜய் இணையான வரவேற்பைப் பெற்ற ஜோதிகா படம்

ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தை ‘மேடம் கீதாராணி’ என்கிற பெயரில் இந்தியில் டப்பிங் செய்து கடந்தாண்டு யூடியூபில் வெளியிட்டிருந்தனர்.

நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசி’. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை, அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் கீதா ராணி என்கிற துணிச்சலான தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்திருந்த நடிகை ஜோதிகாவுக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

இதனிடையே ‘ராட்சசி’ படத்தை ‘மேடம் கீதாராணி’ என்கிற பெயரில் இந்தியில் டப்பிங் செய்து கடந்தாண்டு யூடியூபில் வெளியிட்டிருந்தனர். இந்த படத்துக்கு இந்தி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு யூடியூபில் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளதோடு, 20 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் இந்தி டப்பிங்கிற்கு இணையாக ஜோதிகா படத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.