பெற்றோர் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.

குழந்தைகளுக்கு சிறந்த கல்வி , உணவு, உடை தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது மட்டுமே பெற்றோரின் கடமையல்ல, வளரிளம் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதும் முக்கிய கடமைதான்.

இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் சுற்றி பழகும் சமூகம் வேலை, கல்விக்சூழல் எனப் பல வகையிலும் துவண்டு நிற்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். இதனால் பலரும் வாழ்க்கை பாதையை தவறாக தேர்ந்தெடுத்து தோல்வியை தழுவுகின்றனர். பலர் முடிவு எடுக்க முடியாமல் குழம்பி நிற்கின்றனர். பெற்றோர் சரியான உக்திகளை கையாண்டு பிள்ளைகளை வழிநடத்தினால் தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க முடியும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சில வழிகள்.

மரியாதை கொடுங்கள்

உங்கள் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் உங்களுக்கு அவர்கள் குழந்தைகளாகவே தெரியலாம். ஆனால் அவர்கள் சமுதாயத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அவர்களை அனைத்து விஷயங்களிலும் முன்னிலை படுத்துங்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி.

அடிக்கடி பாராட்டுங்கள்

உங்கள் பிள்ளைகள் ஒரு செயலை செய்யும் போது பாராட்டுங்கள். அனைத்து வயதினரும் எதிர்பார்க்கும் ஓர் விஷயம் பாராட்டு. அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுக்கத்தூண்டும்.

கிண்டலை தவிருங்கள்..

நாம் செய்யும் செயலை பிறர் விமர்சிக்கும் போது அதில் வெளிப்படும் கிண்டல் நம்மை காயப்படுத்தும். அதுபோல் தான் நம் பிள்ளைகளுக்கும். அதுவும் இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.

தனித்திறமையை பாராட்டுங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு தவிர பல விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் அதை பல பெற்றோரும் அறிவதில்லை. அதை தெரிந்து அத்திறமையை பாராட்டுங்கள்.

நம்பிக்கையான நண்பராகுங்கள்

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பது பழமொழி. நீங்கள் தவறையும் நட்பாக எடுத்துரைக்கும் நண்பராக மாறினால் உங்கள் மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஏற்படுவதுடன் அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருவார்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

வலிமையை உருவாக்குங்கள்

பிள்ளைகள் நம்பிக்கை இழக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தால் துவண்டு தவறான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும். அச்சமயத்தில் அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் வலிமை எது என்பதை தெளிவுப்படுத்துங்கள். பலம் எது என்பதை கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த உதவுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் பண்பு வளரும்.

தொழில் ரீதியாக உதவுங்கள்

படித்த பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் தன்னம்பிகைக் இழக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதை கண்டறிந்து அதை அடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாக தேவைப்படும் மருந்து. அதனை சரியான படி பிள்ளைகளுக்கு கற்று கொடுத்தால் சமுதாயத்தில் அவர்களால் சாதிக்க முடியும்.