செல்போன்களை உபயோகப்படுத்துவதற்கே பெரும்பாலான பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள். செல்போன்களை நீண்ட நேரம் கைகளிலேயே வைத்திருப்பது கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
புத்தகங்கள், பென்சில்களை கையாள்வதைவிட செல்போன்களை உபயோகப்படுத்துவதற்கே பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். செல்போன்களை நீண்ட நேரம் கைகளிலேயே வைத்திருப்பது கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பிற்காலத்தில் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கைகளை பயன்படுத்துவதற்கு சிரமங்களை சந்திக்க நேரிடும்.
ஒருசில அறிகுறிகளை கொண்டே அவர்களின் கைகள் பலவீனமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாகவே எழுதுவது, ஓவியம் வரைவது, அதில் வண்ணங்கள் தீட்டுவது போன்ற செயல்களை சிறுவர்கள் ஈடுபாட்டோடு செய்வார்கள். அவர்களது கைகள் பலவீனமாக இருந்தால் பென்சில்களை சீராக கையாள்வதற்கு சிரமப்படுவார்கள். நோட்டில் எழுதும்போது அவர்களது கையெழுத்தை வைத்தே கைகளின் வலிமையை கண்டறிந்துவிடலாம். கைவிரல்கள் வலியாகவோ, பலவீனமாகவோ இருந்தால் அவர்கள் எழுதும் எழுத்துக்கள் அழுத்தமாக இருக்காது. மெல்லிய கோடுகளை போல தென்படும்.
அவர்கள் சாப்பிடும் வழக்கத்தை கொண்டும் கைகளின் செயல்திறனை அளவிட்டு விடலாம். சாப்பிடும் டிபன் பாக்ஸ்களை திறப்பதற்கு சிரமப்படுவார்கள். தண்ணீர் பாட்டிலை திறக்கவும் கைவிரல்கள் சிரமப்படும்.
சாப்பிடும்போது உணவுகளை சிந்திக்கொண்டிருப்பார்கள். ஷூக்கள் அணியும்போது கால்களை அதற்குள் நுழைப்பதற்கு சிரமப்படுவார்கள். ஷூக்களை கைவிரல்களை கொண்டு கட்டுவதற்கும் தடுமாறுவார்கள். அதுபோல் சட்டையில் பட்டன்களை மாட்டுவதற்கும் திணறுவார்கள். விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி விளையாடும் ஆர்வம் குறைந்து போய்விடும். சோப்பு போட்டு கைகளை கழுவுவதற்கும் தடுமாறுவார்கள்.