நிம்மதியான உறக்கத்திற்கு கடைப்பிடிக்க வேண்டியவை

இன்றைய நவநாகரீக உலகில் தூக்கமின்மை பிரச்சினை பலரையும் வாட்டி வதைக்கிறது. குடும்ப சுமை, வேலைப்பழு, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரவில் உறக்கம் வராமல் தவிப்போம்.

இளைய தலைமுறையினர் பலரும் இரவில் தூக்கம் வராமல் சமூக வலைதளங்களை பயன்படுத்திக்கொண்டு பெருமையாக எனக்கு இன்சேம்னியா என பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் மனிதன் ஒரு குறைந்தபட்சம் 8 மணி நேரம் உறங்குவது மிகவும் முக்கியம்.

பாரம்பரிய பாட்டி வைத்தியத்தின் மூலம் எப்படி படுத்தவுடன் தூக்கம் வரவைப்பது என காண்போம்.

மாட்டுப் பால்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் வரும். ஏனெனில் அதில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் என்ற ஹார்மோன்கள் அடங்கியுள்ளன.

வாழைப்பழம்

வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை தரக் கூடியது. முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும்.

சீரகத்தண்ணீர்

தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சினைக்கு குட்பை சொல்லலாம்.

வெங்காயம்

வெங்காயத்தின் தோலை உரித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.

சுரைக்காய்

சுரைக்காயை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதே அளவிற்கு நல்லெண்ணெய் கலந்து இரவு உச்சந்தலையில் நன்றாக தேய்த்து வந்தால் தூக்கமின்மை குறையும்.