ஆப்கான் தலிபான்கள் வசமாய நிலையில் அங்குள்ள பாடசாலைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியவேண்டும் வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், உலக நாடுகளில் உள்ள ஆப்கான்பெண்கள் பலவண்ணங்களில் பாராம்பரிய உடையணிந்து அந்த படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பல்கலைகழகங்கள், பாடசாலைகள் பாலின அடிப்படையில் பிரிக்கப்படும் என அறிவித்துள்ள தலிபான் மாணவிகள், பெண் விரிவுரையாளர்கள், ஊழியர்கள் ஹிஜாப் அணியவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் காபுல் பல்கலைகழகத்தில் உள்ள விரிவுரை மண்டபத்தில் முழுமையாக கறுப்பு உடையணிந்து கையில் தலிபான் கொடிகளுடன் காணப்படும் படங்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து தலிபானின் உத்தரவிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில் உலகநாடுகளில் உள்ள ஆப்கான் பெண்கள் பல்வேறு நிறங்களி;ல் அழகான பாரம்பரிய உடைகளுடன் தாங்கள் காணப்படும் படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஆப்கானிஸ்தானின் அமெரிக்க பல்கலைகழகத்தின் முன்னாள் கல்விப்பணியாளர் பஹார் ஜலாலி லிங்டென் மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.
முழுமையான தன்னை மறைத்து கறுப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்ணின் படத்தை பதிவிட்ட அவர் ஆப்கான் வரலாற்றில் எந்த பெண்ணும் இவ்வாறு ஆடையணிந்ததில்லை என்றும் ,இது முற்றிலும் ஆப்கான் கலாச்சாரத்திற்கு அந்நியமான விடயம் எனவும் தெரிவித்திருந்ததுடன் தலிபானால் பரப்பப்படும் தவறான தகவல் குறித்து உண்மையை தெளிவுபடுத்துவதற்காகவே நான் எனது படத்தை வெளியிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை ஏனைய ஆப்கான் பெண்கள் சமூக ஊடகங்களில் பின்பற்றியுள்ளனர். டிடபில்யூ செய்திசேவையின் ஆப்கான் பிரிவில் பணியாற்றும் வஸ்லட் ஹஸ்ரட் நஜீமி பாரம்பரிய உடையில் தனது படத்தை வெளியிட்டுள்ளதுடன் இது ஆப்கான் கலாச்சாரம் இது ஆப்கான் பெண்களின் ஆடை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை லண்டனை சேர்ந்த பிபிசி பத்திரிகையாளர் சனா சபி அழகான பாரம்பரிய உடையில் தனது படத்தை வெளியிட்டுள்ளதுடன் நான் ஆப்கானில் இருந்திருந்தால் தலையில் ஸ்கார்வ் அணிந்திருப்பேன்,என தெரிவித்துள்ளார்.
பிபிசியில் பணியாற்றும் மற்றுமொரு பத்திரிகையாளரான சொடபா ஹைதரேயும் தனது படத்தை வெளியிட்டுள்ளார். இதுவே எங்களின் பாரம்பரிய ஆடை நாங்கள் நிறைய நிறங்களை விரும்புபவர்கள் எங்கள் அரிசியும் எங்கள் கொடியும் வண்ணமயமானது என அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் ஆப்கானை சேர்ந்தபிரிட்டன் அரசியல்வாதியான பெய்மனா அசாத் எங்கள் பாரம்பரிய ஆடைகள் தலிபான்கள் பெண்களை அணியச்சொல்லும் ஆடைகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கான் பெண்கள் பதிவிட்டுள்ள குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.