யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்தேகநபரொருவரை ஒரு வாரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி…!!

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரை ஒரு வாரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.

யாழ். திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்த நால்வர் சோதனையின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் 2.94 கிராமும், வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளில், அவர்களில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் வசிக்கும் 28 வயதுடைய முத்து என்று அழைக்கப்படும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

மற்றைய மூவரும் 19 வயதுடையவர்கள். பிரதான சந்தேகநபரான முத்து என்பவர் நாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

பிரதான சந்தேகநபருக்கு நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புள்ளதா என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க ஒக்டோபர் முதலாம் திகதிவரை அனுமதியளிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான், பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.