பேரிடருக்கு மத்தியிலும் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் தடைகளின்றி நடைபெற்று வருகின்றன. மாத்தளை மாநகர எல்லைக்குட்பட்ட களுதாவளை ஆற்றங்கரை வீதி பாதை கார்ப்பட் இட்டு செப்பனிடும் பணி அண்மையில் நடைபெற்றது. இவ்வீதியமைப்புப் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் இவ்வீதியமைப்புப் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டார். மாநகரசபையின் ஒன்றரை கோடி ரூபா செலவில் இப்பணி ஆரம்பமாகியது. கொவிட் தாக்கத்திற்கு மத்தியிலும் இத்தகைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் மேயர் பிரகாஷிற்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
மாத்தளை மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் நகரிலுள்ள பாதைகளை செப்பனிடும் பணியை நேரடியாகச் சென்று பார்வையிட்டு தொழினுட்பக்குழுவினருடன் கலந்துரையாடியும் வருகின்றார்.
இது தொடர்பாக சந்தனம் பிரகாஷ் விபரிக்கையில் “எமது சபையால் கொரோனா ஒழிப்புக்கென பல வேலைத் திட்டங்களை செய்துவருகிறோம். கூடுதலான நிதியை கொரோனா ஒழிப்பு சேவைக்கு ஒதுக்கி பயன்படுத்தி வருகிறோம். உறுப்பினர்களும் ஏகோபித்தமுறையில் தமது பூரண ஆதரவை நல்கி வருவது இவ்வெற்றிக்குக் காரணமாகும். மாத்தளை மாநகர எல்லைக்குள் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களை அவசர நிலைமைகளின் போது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்வதற்கு எமது சபையினால் இலவச வாகனசேவையை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கென ஆளணியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு 0710227227 உடன் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
“நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வாகன உரிமையாளர்கள் தவிர்த்து வந்தார்கள். ஆதலால்தான் தனியான சேவையை செய்ய முன்வந்தோம். எமது சபையிலும் சுகாதாரப் பிரிவு உள்ளது. அவர்களின் துணையோடுதான் இந்த மக்கள் சேவையை செய்து வருகின்றோம்.பொசிட்டிவ் உள்ளவர்களை எமது அம்புலன்சிஸ் சுகாதார பரிசோதகர் சகிதம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது மட்டுமல்ல, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான மருந்துகளை எமது சபையிலுள்ள மற்றொரு குழுவினர் வழங்குவார்கள். கொவிட் நபர் சார்ந்த குடும்பங்களுக்கான சேவைகள் இன்னும் பல மேற்கொள்ளப்படுகின்றன.
அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உலருணவுப் பொதிகளுக்கு மேலதிகமாக சபை மூலமும் உதவிகள் வழங்கி வருகின்றோம். நாம் அர்ப்பணிப்பான மக்கள் சேவையை முன்னெடுத்து வருகின்றோம். சுகாதாரத் திணைக்களம் முன்னெடுத்திருக்கின்ற தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுத்து வருகிறோம். எமது வைத்தியஅதிகாரி டொக்டர் அனுசா வெலகெதர உள்ளிட்ட சுகாதாரக்குழுவினர் பரிபூரணமாக ஒத்துழைத்து வருகின்றனர்” எனவும் அவர் விபரித்தார்.
“கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை பொறுப்பெடுத்து தகனக்கிரியைகளை இலவசமாகச் செய்து வருகிறோம். இதுவரை சுமார் 150 உடல்களுக்கு தகனக்கிரியை செய்துள்ளோம். ஒருவர் கொரோனாவால் மரணித்தால் அவருக்கு சுமார் 10ஆயிரம் ரூபா முதல் 15ஆயிரம் ரூபா வரை எமது சபைக்கு செலவாகின்றது. இருந்தும் மக்களுக்கான உயரிய அந்திமகால சேவையாக இதனைக் கருதுகிறோம்.
உண்மையில் இது எமது மாநகரசபை எல்லைக்குட்பட்டவர்களுக்கு மாத்திரமே என்று ஆரம்பிக்கப்பட்டது. எனினும் எமது எல்லைக்குள் உள்ள மாத்தளை ஆதார வைத்தியசாலையில் கொரோனாவால் மரணிக்கும் அனைவரது உடலங்களையும் அவர் எந்த ஊராக எந்தப் பிரதேசத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருப்பினும் நாமே முன்னின்று பொறுப்பேற்று அதனை முறைப்படி தகனம் செய்து வருகின்றோம். ஆளுநரின் உத்தியோகபூர்வமான விசேட அனுமதியுடன் இத்திட்டத்தை செயற்படுத்தி வருகின்றோம்” என்று மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் மேலும் தெரிவித்தார்.