முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்தமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்றையதினம் (21) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குறித்த பதவிக்கு ஜயந்த கெட்டகொடவை நியமிப்பது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமனம் பெற்றுள்ள அஜித் நிவார்ட் கப்ரால், கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வாய்ப்பை வழங்கும் வகையில், தனது தேசியப்பட்டியல் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை பரிந்துரை செய்து, ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு லும்பினி கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த கெட்டகொட அவர்கள் கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆவார்.
1991 இல் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடுவலை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1999 மேல் மாகாண சபைக்கு தெரிவாகினார்.
2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான கெட்டகொட அவர்கள் அவர்கள் இன்றுடன் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை செய்துள்ளார்.