இலங்கையில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரவு வேளையில் அதனை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிய வருகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய திருமண நிகழ்வுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. குறைந்த அளவிலான மக்கள் பங்களிப்புடன் வீடுகளினுள் மாத்திரம் திருமண நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மரண வீடுகளுக்கும், மக்கள் ஒன்றுக்கூடும் பொது நிகழ்வுகள் பலவற்றிற்கும் சுகாதார வழிக்காட்டல்கள் ஊடாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்டுப்பாடுகளின் கீழ் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல நேற்று கூறியிருந்தார். எப்படியிருப்பினும் இது தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி தீர்மானம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திறக்கப்படும் போதிலும் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய மக்கள் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.