புத்தளம் – இஹலபுளியங்குளம் மிகஸ்வெவ பகுதியில் உள்ள கைவிடப்பட்ட விவசாயக் கிணற்றில் வீழ்ந்த யானை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பிரதேசத்தில் யானையின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள மின்சார வேலியை பராமரிக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமை நிமித்தம் அந்த பிரதேசத்திற்கு சென்ற போதே, இவ்வாறு யானை ஒன்று கிணற்றுக்குள் வீழ்ந்து கிடப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் பற்றி கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் பிரதேச மக்களுடன் இனைந்து மற்றும் மண் அகழும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குறித்த யானையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிகவெரட்டிய வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து வைத்தியர் ஒருவர் அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.