ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஏன்?…வெளியான தகவல்

இலங்கையில் நீடிக்கும் இன ரீதியான பிரச்சனைக்கு இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தேசிய ரீதியில் சுயாதீன முறையில் அதனை தீர்த்து வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு விடுத்திருந்தமை குறித்து கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். எங்களிடம் எந்தவித பேதமும் இல்லை. மக்களை இன ரீதியாக பிரிப்பதை நான் விரும்புவதில்லை.

அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களும் எமது நாட்டில் பிறந்த எமது பிரஜைகள் தான். கடந்த காலத்தில் எமக்கு பிரச்சனை இருந்தது அதனை யுத்தம் மூலம் முடிக்கும் துன்பியல் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். இனவாத ரீதியான பிரச்சனைகள் இன்னமும் இருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளை இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தேசிய ரீதியில் சுயாதீனமான முறையில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அழைப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ளார். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமாயின் அதனை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.