சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ராஜபக்ச அரசிடமிருந்து நாட்டை மீட்பதற்கான போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ( Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டின் வளங்களை தமது தனிப்பட்ட சொத்துக்களைப் போன்று விற்கும் ராஜபக்ச அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்துவோம்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்கின்றமைக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து மக்கள் அரண் ஒன்றை அமைக்க வேண்டும்.
தற்போதைய அரசு தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தைக் கிழித்தெறிந்து, நாட்டைக் காட்டிக்கொடுக்கும் திட்டத்தையே செயற்படுத்தி வருகின்றது.
அதுமாத்திரமின்றி, கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தை அரசு இரகசியமாக விற்று, சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.