அரசாங்கம் அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடப்படுவதை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சஜித் பிரேமதாச நேற்று திங்கட்கிழமை பாணமவில் உள்ள ஸ்ரீ போதிருக்காராம விகாரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் அங்கு ஊவா வெல்லஸ்ஸ சங்கத்தின் இரு பிரிவினதும் தலைமைத்தேரரான பாணம ஸ்ரீ சந்திரரத்ன தேரரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச,
நாட்டின் உள்நாட்டு வளங்களைத் துச்சமாகக்கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கின்ற அரசாங்கம், மறுபுறம் அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடப்படுவதை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் அதிகாரத்தையோ அல்லது பணபலத்தையோ பயன்படுத்தி இந்தக் காணிகளை எந்தவொரு தரப்பினரும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். அரசாங்கம் அதன் செயற்பாடுகளின் ஊடாக நாட்டை மிகமோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது.
எனவே உரிய சட்டங்களுக்குப் புறம்பான வகையில் இடம்பெற்றுவரும் இந்த நில அபகரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.