தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில், அதனை பராமரித்த Epic Lanka Technologies நிறுவனத்தின் முன்னாள் வாடிக்கையாளர் உதவி பொறியியலாளர் குற்றப் புலனாய்வுப் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் NMRA குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய, மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
34 வயதான குறித்த சந்தேகநபர் இன்று (28) திவுலபிட்டி, வல்பிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கணனி குற்றச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) தரவுகள் அழிந்தமை தொடர்பில், கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி கைது செய்யப்பட்ட, அதனை நிர்வகித்த Epic Lanka Technologies நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தரீந்திர கல்பகே அடுத்த நாள் (09) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.