இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நல்லின கறவைப்பசுக்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அரியானா மாநிலத்திற்கு சென்றிருந்தோம், அரியானா மாநிலத்தின் ஆளுநருடனும், விவசாய அமைச்சருடனும் கலந்துரையாடி அரியானாவில் இருக்கின்ற முறா என்று சொல்லப்படுகின்ற ஒரு இன மாடு. இந்த மாட்டு இனம் சுமார் ஒரு நாளைக்கு 20 லிட்டர் பாலை தரக்கூடியது.
இந்த இனமானது எமது வடகிழக்கு மாகாணங்களுக்கு பொருத்தமானது ஆகும். அதாவது எமது காலநிலைக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடியது கடந்த காலத்தில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாட்டு இனங்கள் நுவரெலியா போன்ற குளிர் பிரதேசங்களுக்கு ஏற்புடையது. இவை நமது பகுதிகளுக்கு ஏற்றது அல்ல.
ஆனால் முறா அரியானா மாநிலத்தில் இருக்கின்ற காலநிலைக்கு ஏற்ப பொருத்தமானதாக அமையும். ஆளுனர் அவர்களும் விவசாய அமைச்சர் அவர்களும் எங்களுக்கு இது தொடர்பான கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்து இருக்கின்றார்கள். அந்த மாட்டினத்தினுடைய வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பத்தினையும் முடியுமானால் குறித்த இன மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
இரண்டாவதாக நாங்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்று இருந்தோம். விவசாய அமைச்சர், நீர்ப்பாசன அமைச்சர் உட்பட அனைவருடனும் கலந்துரையாடினோம். அங்கு மிளகாய் உற்பத்தி அதிக அளவு தன்னிறைவு கொண்டிருக்கின்றது. மிளகாய் உட்பட சீனி உற்பத்தி கூட அங்கு சிறப்பாக இருக்கின்றது. அதனுடன் நீர் வேலாண்மை திட்டம் சிறப்பாக இருக்கின்றது. அது தொடர்பான தொழில் நுட்பங்களை இரண்டு நாடுகளுக்கு இடையே பரிமாறிக்கொள்வது தொடர்பான விடயங்கள் பற்றியும் பேசி இருக்கின்றோம்.
இது தவிர தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி மாநில அரசின் முதலமைச்சரோடு பேசி இருக்கின்றோம். அதாவது பாண்டிச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் பகுதியில் இருந்து வடக்கிற்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க இருக்கின்றார்கள். நாங்கள் கூறியிருக்கின்றோம். வடகிற்கு ஆரம்பிக்கின்ற பொழுது கிழக்கில் திருகோணமலை துறைமுகத்தை மையப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் மையப்படுத்திய கப்பல் போக்குவரத்தை இணைத்துக் கொள்ளுமாறு.
ஏனென்றால் கிழக்கில் மற்றும் வடக்கிலிருந்தும் அநேகமானோர் வர்த்தக ரீதியாக சுற்றுலாத் துறை ரீதியாக வைத்திய சேவை என பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இந்தியாவிற்கு சென்று வருகின்றார்கள்.ஆகவே அது சிறப்பாக இருக்கும் என முன்மொழியப்பட்டது. அதற்கும் எமக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு தெரியும் நாங்கள் முதலீட்டு வலயங்களை அமைத்து கொண்டிருக்கின்றோம்.அந்த அடிப்படையில் இந்திய முதலீட்டாளர்கள் நாங்கள் பலரோடு பேசியிருக்கின்றோம். அதில் பல இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் தெரிவித்திருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அந்த விடயங்கள் தொடர்பாகவும் முயற்சிகளை முன்னெடுக்கு வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.