பொலீசார் மீது வாள்வெட்டு

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 4 பொலிசார் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் தர்மபுரம் கல்மடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

மணல் வியாபாரிகளிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும், சம்பவ இடத்திற்கு பொலிசார் ஏன் சென்றனர் என்பது தொடர்பிலான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

இரணடாம் இணைப்பு

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு நடந்தது. அந்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக அவசர சேவை இலக்கமான 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் 4 பொலிசார் காயமடைந்துள்ளதுடன் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.