இந்தியாவின் புதுச்சேரி – காரைக்கால் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு இடையில் முன்மொழியப்பட்ட படகு சேவை, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) தெரிவித்துள்ளார்.
காரைக்காலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான கப்பல் சேவைகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் பல்வேறு காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செய்தி வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசாங்கம் இந்த சேவையை புதுப்பிக்க முன்மொழிகின்றது. இலங்கை துணை உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர்கள் சமீபத்தில் இது தொடர்பாக புதுச்சேரி நிர்வாகத்துடன் கலந்துரையாடினர்.
இலங்கை அமைச்சர்களுடன் உரையாடிய புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திரா பிரியங்கா, இலங்கையின் கிழக்கு கடற்கரையில் மேலும் ஒரு துறைமுகத்திற்கு படகு சேவையை இலங்கை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய கப்பல் துறை அமைச்சகம், 56 கடல் மைல் தூரத்தைக்கொண்ட, காரைக்காலுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான படகு சேவையை, 2021 பெப்வரியில் தொடங்கும் திட்டத்தை முன்மொழிந்தது.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் புதுச்சேரி நிர்வாகத்துடன் ஒரு சந்திப்பை ஒன்றையும் நடத்தினார்.
இலங்கையிலிருந்து தமிழர்கள் மத நோக்கத்திற்காக இந்தியாவுக்கு வருகிறார்கள் அத்துடன் சிங்கள மக்களும் இந்தியாவில் உள்ள பௌத்த இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
எனவே இந்தப் படகு சேவை ஆன்மீக நோக்கங்களுக்காக வருகையை எளிதாக்கும். இது சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் இலங்கை இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.