தம்புள்ள, கலோகஹஎல பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து, 3 நாட்களின் முன்னர் காணாமல் போன 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி முதல் சிறுமி காணாமல் போயிருந்தார். 7 வயது சிறுமிக்கு கற்பிப்பதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை, ஆத்துப்பராயவில் வசிக்கும் புத்தினி பியுமாலி என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டார். டிஎஸ் சேனாநாயக்க வித்யாலயத்தில் 9 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மாணவி கணிதத்தில் திறமையானவர். பல இளைய மாணவர்களிற்கு கணிதம் கற்பித்து வந்துள்ளார்.
தமது 7 வயது மகளிற்கு கற்பிப்பதற்காக உறவினர் ஒருவர் மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பாததையடுத்து, 7 ஆம் திகதி குறித்த நபரின் வீட்டிற்கு சிறுமியின் பெற்றோர் சென்றனர் அங்கு யாருமிருக்கவில்லை.
இதையடுத்து, 8ஆம் திகதி தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 9 ஆம் திகதி காலை, தம்புள்ளை கலோகஹஎல பகுதியில் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பொலிசார் சென்ற போது, வீட்டு கட்டிலில் சடலம் இருந்ததையும், துர்நாற்றம் வீசுவதையும் அவதானித்து, தம்புள்ளை நீதிவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, கதவுகளை திறந்து உள்நுழைந்தனர்.
அங்குள்ள கட்டில் ஒன்றில் சிறுமியின் சடலம் காணப்பட்டது. சிறுமியின் உடலில் இருந்து ஆடைகள் அகற்றப்பட்டு, நிர்வாண கோலத்திலேயே சடலம் காணப்பட்டது.
மாணவியை அழைத்துச் சென்ற நபரின் வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, தனது மனைவி மற்றும் மகளுடன் அவர் தலைமறைவாகியுள்ளார் பல கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.