வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. குழந்தைகளின் மூளை நன்கு வளர்ச்சி பெறவும் தூண்டப்படுவதற்கு ஏற்றதான பயிற்சிகளை விளையாட்டு மூலம் கொடுக்கலாம்.
குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களைக் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பில்டிங் பிளாக்ஸ் விளையாட்டு
ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு தருகின்ற எளிமையான விளையாட்டு இது. வெவ்வேறு தோற்றத்தில், பல நிறங்களில் காணப்படும் இந்த பிளாக்ஸால் உருவத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களின் சொந்த கற்பனையால், படைப்பாற்றல் திறமையால் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் வைத்து ஏதோ ஒரு உருவத்தை செய்வார்கள். இது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும். மூளை தூண்டப்படும்.
பசல்ஸ்
கிச்சடி சமையலில் எவ்வளவு சத்துகள் நிரம்பியுள்ளதோ அதுபோல இந்த பசல்ஸ் விளையாட்டில் மூளை தூண்டப்படும் காரணிகள் அமைந்து இருக்கும். அவர்கள் ஒரு உருவத்தை வரவைக்க சிந்தித்து, அதை, இதை என மாற்றி மாற்றி மூளைக்கு வேலைத் தருகிறார்கள். கண்களும் கைகளும் ஒருங்கிணைப்பாக வேலை செய்யும். இந்த பசல்ஸ் வெற்றிகரமாக விளையாடி முடித்தவுடன், குழந்தை வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியைப் பெறும். தன் மேல் நம்பிக்கை வரும்.
வார்த்தை விளையாட்டு
ஃப்ளாஷ் கார்டில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து, அதற்கு ஏற்ற படத்துடன் பொருத்துவது போன்ற விளையாட்டு இது. சிங்கம், புலி, மான், மயில் என விலங்குகளின் பெயரை வைத்துப் படத்தை பொருத்துவது, படத்தை வைத்து பெயரை பொருத்துவது போன்ற விளையாட்டு. எழுத்து திறமை மேலோங்கும். நினைவு திறன் அதிகரிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி
ஏதாவது ஒரு பேப்பரில் பந்து என எழுதிவிட்டு அதைக் குழந்தையிடன் காண்பிக்கவும். அந்தப் பந்தை வீட்டில் தேடி கண்டுபிடிக்க சொல்லலாம். இதுபோல வார்த்தை வைத்து பொருளை கண்டுபிடிக்கும் விளையாட்டால் குழந்தைகள் வார்த்தைகளை அதன் சொல் அமைப்பை நன்றாகவே கற்றுக் கொள்வார்கள்.
போர்ட் கேம்ஸ்
பாம்பு – ஏணி, லூடோ, செஸ் போன்ற போர்டில் விளையாடும் விளையாட்டுகளால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பிரச்னையை கையாளும் திறன் மேலோங்கும். பொறுமை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் புரிந்து கொள்வார்கள்.
எண் விளையாட்டு
இசையை ஒலிக்க செய்துவிட்டு, 1 முதல் 100 வரை சொல்ல வேண்டும். பாட்டை நிறுத்திய உடனே எந்த எண்ணில் இருக்கிறார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். ஒவ்வொரு முறை பாட்டை நிறுத்தும்போது ஒவ்வொரு குழந்தையும் எண்ணை மாற்றி மாற்றி சொல்லி கொண்டே இருப்பார்கள். இசை நிறுத்தியவுடன் எந்த எண்ணில் விட்டார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். குழுவாக விளையாடும் திறன் மேலோங்கும். எண் பற்றிய அறிவு கிடைக்கும்.
மொழி திறன்
உங்களுக்கு தெரியுமா? குழந்தைகளால் தங்களது 3-5 வயதுக்குள்ளேயே 2-3 மொழிகளைக் கற்கும் திறன் இருக்கும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை வீட்டில் பேசினால், இரண்டையுமே கற்று கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியையும் சுலபமாக குழந்தைகளால் கற்க முடியும்.
உடலுக்குப் பயிற்சி தரும் விளையாட்டு
ஓடுதல், ஸ்கிப்பிங் விளையாடுதல், குதித்தல், ஓடிப் பிடித்து விளையாடுதல், பந்தை பிடித்தல், கொகோ விளையாடுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளால் பல்வேறு நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். உடற்பயிற்சி, மனபயிற்சி இவை.