கோவிட் சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைக்க முடிவு! அரசாங்கம்

நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கோவிட் சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

சுகாதார அமைச்சின் கோவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி (Dr. Anwar Hamdani) இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, அந்தச் செயல்பாடுகளில் இருந்து 30 சிகிச்சை மையங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், படிப்படியாக மீதமுள்ள சிகிச்சை நிலையங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது சிகிச்சை நிலையங்களில் உள்ள 34,007 படுக்கைகளில், இதுவரை 19,660 காலி செய்யப்பட்டுள்ளன.

கோவிட் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகளில் சுமார் நாற்பது சதவீத படுக்கைகள் இப்போது வெறுமையாக உள்ளன. கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துவிட்டது.

நாடும் கோவிட் வைரஸ் சிவப்பு மண்டலத்தில் இருந்து பசுமை மண்டலத்திற்கு நகர்ந்துள்ளது, எனினும், தற்போதைய நிலையை பராமரிக்காவிட்டால், அது விரைவில் சிவப்பு மண்டலத்திற்கு மாறிவிடும்.

நாட்டை பராமரிக்க சில சுகாதாரச் சட்டங்கள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் அடிப்படை சுகாதாரச் சட்டங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.