தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் 21ஆம் திகதி பாடசாலைக்கு வருகைத்தரவில்லை என்றால் 18,000 பட்டதாரி பயிற்சியாளர்களை நியமிக்க கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகளுக்கு தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வலய கல்வி அலுவலக அதிகாரிகளை பாடசாலை நடவடிக்கைளில் ஈடுபடுத்துமாறு கல்வி அமைச்சினால், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
200க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட 5000 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் இரண்டு நாட்கள் கற்பித்தல் நடைபெறாது. அடுத்த வாரம் முதல் வகுப்பறை நடவடிக்கைகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட கூடாதெனவும், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது தொடர்பில் எவ்வித அச்சமும் இருக்க கூடாதென அவர் குறிப்பிட்டள்ளார்.
அத்துடன் அன்றைய தினம் கல்வி சாரா ஊழியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தயார் என மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.