கறிவேப்பிலை நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் நிலையில், ஆனால் நாம் அதனை சாப்பிடும் போது ஒதுக்கி வைப்பதை தான் வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆம் வயிறு, குடல் போன்ற உறுப்புகளை சுத்தம் செய்து குடல் சம்பந்தமாக நோய்களை தவிர்ப்பதுடன், தேவையற்ற கொழுப்பு உடம்பில் சேராமல் தடுக்கின்றது. மேலும் கண் பார்வை மற்றும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கின்றது. பல நன்மைகள் அளிக்கும் கறிவேப்பிலை மிகவும் சுலபமாக சுவையான சாதம் தயார் செய்வதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
பொடிக்க:
மிளகு, கசகசா – தலா 1 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
முந்திரி – 4,
கறிவேப்பிலை – 1 கப்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 6.
செய்முறை
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.