வாசிப்பு ஒரு மனிதனை முழுமையடையச் செய்யும், வாசிப்பு அவனை வாழவைக்கும், வாசிப்பு மனிதனுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். வாசிப்பை மூலதனமாக்கியவர்களே இவ்வுலகில் ஆற்றல்மிக்கவர்களாகவும், ஆட்சியாளர்களாகவும், சாதனை படைத்தவர்களாகவும், ஆளுமைமிக்கவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் வாசிப்போம், வாசிப்பை நேசிப்போம்.
இதனை தாரகமந்திரமாகக் கொண்டே இலங்கை அரசு 2004 ஆம் ஆண்டு முதல் ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியது. அந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக ஒக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஊடாக மாணவர் உட்பட பொதுமக்களை வாசிப்பின் பால் ஈர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அரசு நூலக ஆவணங்கள் சபையின் ஊடாக வருடத்துக்கு ஒரு தொனிப்பொருளை மையமாக வைத்து பல நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சுற்று நிரூபங்களை வெளிப்படுத்துவதுடன் இதற்கான ஆரம்பகட்ட வேலைகளுக்காக கல்வி அமைச்சு, உள்ளூராட்சி அமைச்சு மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகளையும் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றது.
‘வாசிக்கும் சமூகத்தை உருவாக்க சிறுவர்களிடம் இருந்து ஆரம்பிப்போம்’ என்பதே இவ்வாசிப்பு மாதத்தின் பிரதான கருப்பொருளும், இலக்குமாகும். இது நமது அரசின் மிக உன்னதமான வேலைத் திட்டமாகும்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றமை கவலைக்கிடமாகவுள்ளது. இவர்கள் வாசிப்பின் பெறுமதியையும், அதன் அவசியத்தையும் புரியாதவர்களாக பாடசாலை பாடவிதானங்களை மட்டும் படித்து பரீட்சைக்கு தோற்றுபவர்களாக உள்ளனர். பரீட்சையில் சித்தியடைந்து பட்டங்களை பெற்று தொழில் பெறுகின்ற குறுகிய நோக்கத்துடனேயே அவர்களது வாழ்வு முடக்கப்படுகின்றது.
பெற்றோரும் ஆசிரியர்களும் கூட அதனை இலக்காகக் கொண்டே மாணவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பாடசாலை, மேலதிக தனியார் வகுப்புகள், தொலைக்காட்சி, ஸ்மாட்போன் என ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே அவர்களின் அறிவுத்தேடல் மழுங்கடிக்கப்படுகின்றது.
இந்த நவீன உலகின் சவால்களை முறியடித்து வெற்றி இலக்கு நோக்கி பயணிப்பதற்கும், தனிமனித ஆளுமை மிக்கவராகவும், சமூக அங்கீகாரம் உடையவராகவும், பொதுஅறிவு மிக்கவராகவும் நீங்கள் ஆக வேண்டுமாயின் நீங்கள் சிறந்த வாசிப்புப் பழக்கத்தை உடையவராக மாறுங்கள்.
ஒரு தனி மனிதனுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அவன் தனித்துவமான சிறந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான சிறந்த பண்புகள் மேலோங்க வேண்டுமாயின் நூல்களை நேசிப்பவராகவும் அவைகளை இரசித்து வாசிப்பவராகவும் இருக்க வேண்டும். பல நூல்களை வாசிக்கின்றவர் பல பெறுமானங்களை பெறுகின்றார். அவர் பெறுகின்ற அந்த பல பெறுமானங்கள்தான் அவரை தனித்துவமானவராக மேலோங்கச் செய்கின்றன. அதன் மூலம் அவர் அச்சமூகத்தின் தனிமனித அங்கீகாரத்தை பெறுகின்றார்.
வாசிப்பு என்பது ஓர் அற்புதமான பழக்கம். இதன் மூலம் கிடைக்கும் அறிவும் அதனால் பெருகும் ஆற்றலும் நம்மை பண்படுத்தி, நம்மை பட்டை தீட்டி வைரமாக்கும் என்பதில் ஐயமில்லை.
இதனை நம்மில் பெருந்தொகையானவர்கள் அறியாமல் ஓய்வு காலத்தை வீணடித்து விடுவது கவலைக்குரிய விடயமாகும். தேநீர் கோப்பையோடு முற்றத்தில் இருந்து கொண்டு பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் வாசிப்பதும் அதிலுள்ள சுவாரஸ்யங்களை நம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் நம் மத்தியில் அருகிப் போய் விட்டது. இந்த துர்ப்பாக்கிய நிலை மாறி எதிர்காலத்தில் பெரியவர்களும் வாசிப்பாளர்களாக மாற வேண்டும். அப்போதுதான் இளையவர்களும் வாசிப்பாளராக மாறுவார்கள்.
பொதுஅறிவு, இரசிப்புத்திறன், ஞாபக சக்தி, பிழையில்லாத எழுத்து, நேர்த்தியான வசனநடை, சிறந்த பேச்சு என்பவற்றை கட்டமைக்க வாசிப்பு இன்றியமையாததாகும். பரீட்சைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, பட்டம் பெற, பதவிகள் பெற, எவ்வகையான தலைப்பிலும் உரையாற்ற வாசிப்பே அடிப்படையாகும்.
இவை மட்டுமன்றி ஏனையவர்களிலிருந்து நீங்கள் வேறுபட்ட திறனாளியாகவும், தொழில் நிலையத்தில் வினைத்திறன் மிக்கவராகவும் நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள். மேலும் நம்மை சில நேரங்களில் கவ்விக் கொள்ளும் விரக்தி, கோபம், இயலாமை, அசௌகரியங்கள், துன்பங்கள் என்பவற்றிலிருந்து மீண்டு வருவதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் வாசிப்பு இன்றியமையாத துணையாகும்.