ரயில்வே திணைக்களத்திற்கு 1,116 மில். ரூபா நஷ்டம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 67 நாட்களில் ரயில்வே திணைக்களத்திற்கு 1,116 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழமையாக ஒரு நாளில் ரயில்வே திணைக்களத்திற்கு 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கான வருமானம் 500 மில்லியனைத் தாண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக கடந்த 67 தினங்களாக தற்காலிகமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில்வே திணைக்களத்திற்கு அதனால் பெருமளவு வருமானம் இழக்கப்பட்டுள்ளது. அதேவேளை நேற்றைய தினம் முதல் மாகாண மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்களுக்கு செல்வோர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டுள்ள பிரவேச பத்திரத்தை உபயோகித்து ரயில்களில் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க 130 ரயில் சேவைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)