வெளிநாட்டு காதலியால் கொழும்பில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை…

கொழும்பில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலியின் வேண்டுகோளுக்கமை 4 வங்கிக் கணக்குகளை ஆரம்பித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலி செய்த பாரிய மோசடி தொடர்பிலேயே காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞராகும்.

வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி குறித்த வங்கி கணக்கு ஊடாக பணம் கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றுள்ள நிலையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான காதலன் மற்றும் அவரது காதலி 4 மாதங்களாக பேஸ்புக் ஊடாக அறிந்துக் கொண்டு காதல் தொடர்பு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த காதலி தொடர்பில் எவ்வித தகவலும் அறியாத இந்த இளைஞர் இலங்கையில் உள்ள வங்கிகள் நான்கில் கணக்குகளை ஆரம்பித்துள்ளார். அத்துடன் தாம் இருவரும் இணைந்து வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்போம் என காதலி தெரிவித்ததாக இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த கணக்குகளுக்கான ATM அட்டை மற்றும் அனைத்து ஆவணங்களும் குரியர் சேவை ஊடாக காதலிக்கு கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்குகளின் அனைத்து நடவடிக்கைகளும் காதலியாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கணக்குகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களின் போதும் தனது கையடக்க தொலைபேசிக்கு குறுந்த மாத்திரமே கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபரான காதலியை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.