முடிந்தால் நிரூபியுங்கள் – சுமந்திரனிடம் பகிரங்க சவால்.. வெளியான தகவல்!

நாங்கள் ஒரு படகிற்கு 5000 ரூபா கொடுத்து உள்ளூர் இழுவை மடி தொழில் புரிவதை நிரூபிக்கட்டும், நாங்கள் அவரை ஆண்மகன் என ஏற்றுக்கொள்கின்றோமென குருநகர் கடற் தொழில் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

”நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M.A sumanthiran), உள்ளூர் இழுவை மடி தொழிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு அண்மையில் ஒரு போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தார்.

போராட்டத்தின் முடிவில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு படகுக்கு 5 ஆயிரம் ரூபா லஞ்சம் கொடுத்து உள்ளூர் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அmவர் பதவியை விட்டு இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் எப்போது அரசியலுக்கு வந்தவர்? அவர் எமது வயிற்றில் அடிப்பதற்காக இந்த வேலை செய்கின்றார்.

அவர் நாங்கள் ஒரு படகுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுத்து இழுவை மடி தொழில் புரிவதை நிரூபிக்கட்டும் – நாங்கள் அவரை ஒரு ஆண்மகன் என ஏற்றுகொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.