குழந்தைகள் பெற்றோரின் ஈடு இணையற்ற செல்வங்கள். அச்செல்வங்களுக்கு நோய் நொடிகள் ஏற்படக் கூடாது என்பதில் பெற்றோர் எப்போதும் கண்ணுங் கருத்துமாக இருப்பார்கள். அவர்களுக்கு சிறுகாய்ச்சல் ஏற்பட்டால் கூட தாய் தந்தையர் பரிதவித்துப் போய் விடுவார்கள். குழந்தைகளில் சிலருக்கு காய்ச்சல் ஏற்படும் போது காய்ச்சலுடன் வலிப்பு (Febrile seizures)
காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு தம் குழந்தைகள் பற்றிய அச்சமும் அவர்களின் எதிர்காலம் பற்றி ஒருவித கவலையும் எப்போதும் இருக்கும். பெற்றோர் இதன் காரணமாக கடும் மனஅழுத்தத்துடன் காணப்படுவார்கள். எனவே இக்கட்டுரையின் நோக்கம் பெற்றோரின் சந்தேகங்களையும் வினாக்களையும் தீர்த்து அவர்களுக்கு உண்மையை தெரிய வைப்பதேயாகும்.
காய்ச்சலுடன் ஏற்படும் வலிப்பு பொதுவாக 6 மாதத்திற்கும் 5 வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு, காய்ச்சல் ஆரம்பித்து முதல் 24 மணித்தியாலங்களுக்குள் அல்லது 48 மணி நேரத்திற்குள் பொதுவாக ஏற்படக் கூடும். ஆனால் காய்ச்சல் ஏற்படும் எல்லாப் பிள்ளைகளுக்கும் வலிப்பு ஏற்படுவதில்லை. சிறு பிள்ளைகளில் 3 வீதம் ஆனோருக்கு மட்டுமே இவ்வாறு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. கடுங்காய்ச்சலின் போது ஏற்படும் இந்த வலிப்பு சில வேளைகளில் மிதமான காய்ச்சலின் போது கூட ஏற்படலாம் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பின் போது முழு உடலும் அல்லது ஒருபக்க அவயங்கள் மட்டும் அசைவுறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
காய்ச்சலின் போது வலிப்பு ஏன் பிள்ளைகளில் ஏற்படுகின்றது என்னும் கேள்வி அநேகமானோரின் மனங்களிலே எழவாம். குழந்தைகளுக்கு பொதுவாக வைரஸ் காய்ச்சல் ஏற்படும் போதுதான் வலிப்பு ஏற்படுகிறது. ஆனால் அதைத் தவிர ஏனைய காய்ச்சல்களின் போதும் வலிப்பு ஏற்படக் கூடும். பிள்ளைகளிலே மூளை என்பது இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஓர் உடல் உறுப்பு ஆகும். பெரியவர்களின் மூளையின் அளவிற்கு அதன் தொழிற்பாடு முதிர்ச்சியடைந்து இருப்பதில்லை. எனவே பிள்ளைகளில் காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது மூளையில் ஏற்படும் ஒருசில இரசாயன மாற்றங்கள் காரணமாக உடல் தசைகளில் ஏற்படும் தொடர்ச்சியான துடிப்பே வலிப்பாக வெளிப்படுகின்றது.
காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படுவதில் மரபணு காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் இந்நோய்த்தன்மை ஓர் குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பாதிக்கிறது. உதாரணமாக பெற்றோரில் ஒருவருக்கு சிறுவயதில் காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களது குழந்தைகளுக்கு இந்நோய் நிலைமை ஏற்படக் கூடிய சாத்தியம் மிக அதிகம். அதேபோன்று சகோதர சகோதரிகளில் ஒருவருக்கு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டு இருக்கும் எனின் மற்றையவர்களுக்கு அது வரக் கூடிய நிகழ்த்தகவு அதிகமாகும்.
காய்ச்சலுடன் ஏற்படும் வலிப்பு என்பது காக்கை வலிப்பு நோய் (Epilepsy) அல்ல என்பதை பெற்றோர் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். காய்ச்சலுடனான வலிப்பினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு எவ்வித பாதிப்புக்களோ அல்லது பின்விளைவுகளோ ஏற்படுவதில்லை. சிறுவர்களின் கற்றல் திறமைக்கும் வளர்ச்சிப் படிகளுக்கும் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே காக்கை வலிப்பை போன்று வலிப்பினைக் கட்டுப்படுத்தும் விசேடமான மருந்துகள் (anti-epileptic drugs) காய்ச்சலுடனான வலிப்பில் பாவிக்கப்படுவதில்லை.
மேலும் 5 வயதைக் கடந்த பின் காய்ச்சலுடனான வலிப்பு ஏற்படும் பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் வலிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விடயமாகும். ஆகவே காய்ச்சல் வலிப்பினால் நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும் என பெற்றோர் எள்ளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.
காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படும் குழந்தைகளைப் பெற்றோர் எப்படி பராமரிக்க வேண்டும்? நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த வலிப்பானது காய்ச்சல் ஏற்பட்ட முதல் 48 மணித்தியாலங்களுக்குள்ளே மட்டுமே ஏற்படும். எனவே குழந்தைக்கு காய்ச்சல் இருப்பது போன்று சந்தேகம் ஏற்பட்டால் சரியானதொரு உடல் வெப்பமானியைப் பாவித்து வெப்பநிலையை அறிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் இருப்பின், உடல் நிலைக்கேற்ப அல்லது வைத்தியர் அறிவுறுத்தலுக்கமைய ‘பரசிட்டமோல்’ மருந்தினைக் குழந்தைக்கு வழங்க வேண்டும். உடல் சூட்டைக் குறைக்க சில பெற்றோர் ஈரத்துணியினால் குழந்தையின் உடலைத் துடைப்பதைப் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். எனினும் இச்செயலானது வலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் என இதுவரை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டவுடன் அவர்களை இடப்பக்கமாக சரித்து படுக்க வைத்து அவர்கள் வாயிலிருந்து உமிழ்நீர் வெளியேறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குழந்தையின் வாயினுள் ஏதேனும் பொருட்களையோ அல்லது விரல்களையோ உட்செலுத்தக் கூடாது. கைகளில் கூர்மையான பொருட்கள் வழங்குவதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் காயங்களையும், உயிராபத்தையும் தவிர்க்கலாம்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீடிக்குமாயின் குழந்தையை பக்கவாட்டில் சரித்த வண்ணம் அருகிலுள்ள வைத்தியரிடமோ அல்லது வைத்தியசாலைக்கோ எடுத்துச் செல்ல வேண்டும். வலிப்பு ஓரிரு நிமிடங்களில் குணமடைந்தால் கூட வைத்தியரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
காய்ச்சலுடன் ஏற்படும் வலிப்பு என்பது பெற்றோரையும், குடும்பத்தாரையும் பொறுத்தவரையில் மிகவும் பயங்கரமானதும், சவால் மிகுந்ததுமான ஒரு அனுபவமாகும். ஆனால் இந்நோய்த் தன்மையின் அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதையும், அது பிள்ளையின் மூளை வளர்ச்சிக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்ற உண்மையையும் பெற்றோர் விளங்கிக் கொண்டால் இச்சவாலை முகங்கொடுக்க அது பெருமளவில் ஒத்தாசையாக அமையும்.
வலிப்பு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் குறித்து அறிந்து வைத்திருப்பது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இன்றியமையாததாகும். மேலும் குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பின்னர் காய்ச்சலுடனான வலிப்பு ஏற்படக் கூடிய அபாயம் தானாகவே இல்லாது போய்விடும் என்பதும் மகிழ்ச்சிகரமான விடயமாகும். எனவே காய்ச்சலுடன் ஏற்படும் வலிப்பைப் பற்றி நன்கு கற்றறிந்து கொண்டு பெற்றோர் தம் குழந்தைச் செல்வங்களை கண்ணுங் கருத்துமாக பராமரித்தல் அவசியம்.