கொவிட் தொற்று அச்சுறுத்தல் இன்னுமே கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. மக்களின் கவனயீனம், சுகாதார விதிமுறைகளைப் பேணாமை என்பன பரவலுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளன. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வோரும் சிறு தவறுகள் காரணமாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஆங்கில மருத்துவ அடிப்படையில் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் கொவிட் தொற்றுகின்ற வீதம் குறைவதோடு, நோய் தொற்றினாலும் ஏற்படுகின்ற உயிராபத்தையும் கட்டுப்படுத்தலாம். ஆனால் தடுப்பூசியானது 100 வீதம் பாதுகாப்பு எனக் கருதி அலட்சியமாக நடந்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு மக்களுக்கு ஆலோசனை கூறுகின்றார் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் (தொற்றாநோய் சிகிச்சை) பதில் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர்.
‘கொவிட் காரணமாக ஏற்படக் கூடிய நியூமோனியா நிலைமைதான் ஆபத்தானது. இந்த நிலைமை ஏற்பட முன்னர் வைத்தியரை அணுகுவதும், மிகப் பொருத்தமான சிகிச்சையை பெறுவதும் மிகவும் முக்கியமானவை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் ஒருங்கிணைந்து பயணிப்பது மிகவும் காத்திரமானது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிகுறிகள் தென்படுமானால் கீழ்வரும் ஆயுர்வேத சிகிச்சை ஒழுங்குகளைக் கடைப்பிடிக்குமாறு ஆலோசனை தருகிறேன். காய்ச்சல், தடிமல் இலேசாக வரும் போதே ‘சுவதரனி சூரணம்’ (ஆயுர்வேத வைத்திய சபை அனுமதித்தது) அரை தேக்கரண்டி காலை- மாலை சுடுநீரில் கரைத்துக் குடிக்கவும். அத்துடன் கருஞ்சீரகம் அரைத் தேக்கரண்டி காலை, மாலை தேனுடன் மென்று சாப்பிடவும்.
காய்ச்சலுடனான உடல்வலி தொடங்கும் போது, மேற்கூறியவற்றுடன் ‘சுதர்சண’ மாத்திரையை காலை 1, மாலை 1 என்றவாறு பாவிக்கவும். அருந்துவதற்கு *கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, திப்பிலி 1 தேக்கரண்டி, கராம்பு 2-3 என்பவற்றை அவித்த அனுபான நீரைப் பயன்படுத்தவும்.
மேலும் சீத்தாராமவட்டி (இதை கூடுதலாக எடுப்பது நஞ்சாகும்) என்ற மாத்திரையில் 2- 3 வீதம் காலை, மாலை மேலே கூறிய மருந்துகளுடன் எடுக்கவும். இவற்றுடன் கூடவே நீராவி பிடித்தல்/ மூலிகை ஆவி பிடித்தல்நல்லது. மூலிகை இலைகளாக நொச்சி, ஆடாதோடா, எலுமிச்சை, துளசி, புதினா போன்றன சிறந்தவை.
தேநீருக்குப் பதிலாக இஞ்சி, கொத்தமல்லிப் பானம் அல்லது இடைக்கிடையே சுடுநீராவது பருகுவது நல்லது. மேற்கூறியவற்றுடன் உங்கள் சுகவீனம் அநேகமாக சுகமாகலாம். மணம் சுவை அற்று சாப்பிட முடியாமல் வரும் போது தான்யாதி பஞ்சக்க (Dhaanyaadi panchaka) என்ற குவாத்த மருந்தில் 30ml காலை மாலை சாப்பாட்டுக்கு முன்னர் எடுக்கவும்.
சாதாரண அல்லது கடுமையான இருமலுடன் சுவாசிக்க ஓரளவு கடினமாக இருப்பின் நீங்கள் வைத்தியரை நாடுவது நல்லது. அது நியூமோனியாவாகக் கூட இருக்கலாம். இதன் பிறகு வைத்தியரின் கண்காணிப்பின் கீழ் மருத்துவமே சிறந்தது. சுவாசிக்க கடினம் உருவாகும் போதே சர்சபாதி தைலம் எண்ணையை நெஞ்சிலும் முதுகிலும் 5ml-10ml அளவில் காலை, மாலை பூசித் தேய்த்து விடுவதோடு, தெனிம்ப தெபட்டு குவாத்த மருந்தில் 30ml (2 மேசைக்கரண்டி) சாப்பாட்டுக்கு முன் குடிக்க வேண்டும். தொண்டையில் ஏற்படும் கரகரப்பை குறைக்க கறுவாப்பட்டை சிறிதளவு அவித்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாயை கொப்புளிக்கவும்.
மருந்துகளை 10–15 நாட்களுக்கு எடுப்பது நல்லது. 2–3 நாட்களில் காய்ச்சல் தணிந்ததும் பூரண சுகம் எனக் கருத வேண்டாம். மேலும், ஆங்கில மருந்துகள் எடுக்க நேர்ந்தால் அதை முதலாவது எடுத்து 30 நிமிடங்கள் தாண்டியதும் மூலிகை மருந்துகளை எடுக்கலாம். மேலே குறிப்பிட்ட வளர்ந்தவர்களுக்கான மருந்துகளின் அளவில் பாதி அளவை சிறுவர்களுக்கு வழங்கவும்.