சி. வி. ஸ்ரீதர் 1933 ஜூலை 22 ஆம் திகதி பிறந்தவர். 2008 அக்டோபர் 20ஆம் திகதி தனது 75 வது அகவையில் காலமானார். இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பொலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.
சித்தாமூர் விஜயராகவுலு ஸ்ரீதர் கிருஷ்ணன் (ஸ்ரீதர்) செங்கல்பட்டு என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீதர் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் முகத் திறமை கொண்ட ஒரு கலைஞர்.
மனைவி பெயர்:தேவசேனா.
ஸ்ரீதர் கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்ரீ தர், விஜயராகவுலு ரெட்டியார் – தாயாரம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் அப்போதைய செங்கல்பட்டு செஞ்சோசப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தார். தனது 20-வது வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதித் தேர்ச்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடகப் போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார். அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில் உள்ள ஏ. வி. எம் நிறுவனத்தில் இயக்குனர் ப. நீலகண்டனை சந்தித்துள்ளார்.
அவர் அந்தக் கதையை அவரிடம் காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதைப் படமாக்கலாம் என்று கூறிவிட்டார். ஆனால் மனம் தளராத ஸ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் சொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள தி. க. சண்முகத்திடம் காட்டிய போது அது விரைவில் நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக எடுக்க நினைத்தார். சண்முகம் அந்தக் கதையில் சில திருத்தங்களை செய்யச் சொன்னார். பின்பு அந்தக் கதை நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதுதான் 1954 இல் ரத்த பாசம் என்று எடுக்கப்பட்டது. அந்த படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான
இளங்கோவன் வசனத்தால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு சித்தூர் ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றார். ஸ்ரீதர் தனது தொடக்க காலத்தில் எதிர்பாராதது, மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தம புத்திரன், மஞ்சள் மகிமை போன்ற பல திரைப்படங்களுக்கு வசன கர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார். ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினிகணேசன், சரோஜாதேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம் கதாநாயகி அந்தஸ்தை சரோஜாதேவிக்கு வழங்கியது. இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார்.
இவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த பி.வாசு,எஸ்.ஏ சந்திரசேகர்,சி.வி.ராஜேந்திரன் (ஸ்ரீதரின் தம்பி)போன்றோர்கள் பின்னாளில் பெரிய இயக்குனர்களாக தமிழ் சினிமாவை வலம் வந்தனர். இவர் கடைசியாக இயக்கிய படம் “தந்துவிட்டேன் என்னை”.
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் இயக்குனர் பணியிலிருந்து முழுவதுமாக 1991 ஆம் ஆண்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2008 அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 75 ஆவது அகவையில் காலமானார். தமிழ் சினிமாவில் பல புதுமைகள் புரிந்த பெருமைக்குரியவர் ஸ்ரீதர்.