உலகப்புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றானதும்,இந்திய வரலாற்றில் காதலின் சின்னமாகவும் விளங்கும் “தாஜ்மஹால் “எவ்வாறு பெருங்கீர்த்தி கொண்டதோ அவ்வண்ணமே இந்திய சினிமா வரலாற்றில் காதலின் சிறப்பை பிரமாண்டமானதாக காட்டிய, நடிப்பு பல்கலைக்கழகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் உருவான இமாலயவெற்றிக்காவியம் “வசந்தமாளிகை” என்ற காதல் காவியம். இத்திரைப்படம் வெள்ளித்திரையில் வசந்தகாலமாய் அமைந்து 49 ஆண்டுகள் நிறைவடைகின்றது. (29.09.1972)…
1971 இல் தெலுங்கு சுப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஷ்வரராவ் கதாநாயகனாக நடித்து வெற்றி கண்ட”பிரேம் நகர்”படத்தின் தமிழ் பதிப்பே “வசந்தமாளிகை “. பிரமாண்ட தயாரிப்புகளுக்கு பெயர் போன விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் பெரும் பொருட்செலவில் டி.ராமாநாயுடு தயாரிப்பில் உருவான காதல் காவியம் “வசந்த மாளிகை.கௌசல்யா தேவி என்ற தெலுங்கு பெண் எழுத்தாளரின் கற்பனையில் உருவானதுதான் இந்த ஜமீன் காதல் கதை. அழகாபுரி என்ற ஊரின் ஜமீன்தார் குடும்பத்தில் ‘ஆனந்த்”(சிவாஜி கணேசன்) என்ற இளைய ஜமீன்தார் தான் இக்கதையின் நாயகன். தந்தை பெரிய ஜமீன்தார் (எஸ்.வி.ரங்காராவ்) மறைவுக்குப்பின் செவிலித்தாயின் (புஷ்பலதா) அரவணைப்பில்
செல்லமாக வளரந்த பிள்ளை ஆனந்த். இறுதி வரை பெற்ற தாயின் பாசம் நாயகனுக்கு அந்த ஜமீன் மாளிகையில் கிடைக்கவில்லை.
பின் தந்தையைப் போல் மதுவுக்கு அடிமையாகிறான் நாயகன்.பெரிய ஜமீன் போன்ற அரண்மனையில் நாயகனை சரியாக புரிந்து கொள்ளும் அளவிற்கு அங்கு யாருமில்லை. இச்சூழலில் லதா (வாணிஸ்ரீ) என்ற விமானப் பணிப்பெண் ஆனந்த்தை சந்திக்கன்றாள். லதாவின் கண்ணியமிக்க குணம் ஆனந்த்தை கவரவே தன் அந்தரங்க காரியதரிசியாக லதாவை நியமிக்கின்றான். சதா பெண்களுடனும், மது பாட்டில்களுடன் பொழுதை கழிக்கும் நாயகனை ஒரு கட்டத்தில் திருந்தி வாழ வழி செய்கிறாள் லதா.இது இருவர் காதலையும் அரும்புவதற்கான சூழலை ஏற்படுத்துகின்றது.
பின் இருவரும் ஈருடல் ஓருயிராய் காதலில் சங்கமிக்கின்றனர்.தன் காதலிக்காக ஓர் பெரிய மாளிகையையே உருவாக்குகின்றான் நாயகன் ஆனந்த். இம்மாளிகையே கதைப்படி “வசந்த மாளிகை” என காதலின் சின்னமாகவும் அமைகின்றது. கிட்டத்தட்ட தாஜ்மஹால் போன்ற வடிவில் இம்மாளிகையின் வெளித்தோற்றத்தை காட்சிப்படுத்தி ரசிகர்களின் பார்வையை வெகுவாக கவர்ந்திருப்பார் கலை இயக்குனர். உள்ளகத்தில் ஏராளமான வேலைப்பாடுகளால் அமைந்த மாடங்கள்,பொய்கை,கண்ணாடி மாளிகை,வசந்தமண்டபம் என காட்சிகளை அட்டகாசமாக அமைத்த உழைப்பின் பெருமை இப்படத்திற்கு பெரும் வலுவைக் கொடுத்தது. இவர்கள் காதலை வழமை போல் பணக்கார வர்க்கம் சூழ்ச்சியால் பிரிக்கின்றது. விஜய் (பாலாஜிஆனந்த்துக்கு அண்ணன்),சுகுமாரி (விஜய் மனைவி),சாந்தகுமாரி (ஜமீன்தாரிணி ஆனந்த்துக்கு தாயார்), நாகேஷ் (பஞ்சவர்ணம்) போன்றோர்களால் லதாவுக்கு திருட்டுப்பட்டம் வருமாறு ஒர் சூழலை ஏற்படுத்தி இருவரையும் பிரிக்கின்றனர். இதனால் மனம் நொந்த லதா குடும்பத்தினர் லதாவுக்கு வேறொரு மணமகனுடன் திருமணம் பேசி நிச்சயிக்கின்றனர். லதா மணநாளன்று ஆனந்த் லதாவை மறக்க முடியாமல் விஷமருந்தி தன்னைத் தானே அழித்துக்கொள்ள முயற்சிக்கின்றான்.
இவர்களின் காதல் தொடர்பை அறிந்த மணமகனின் பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தவே, லதாவின் நற்குணத்தை நன்குணர்ந்த ஆனந்த்தின் தாயார் ஆனந்த்துடன் லதாவை இணைத்து வைக்க முடிவு செய்து திருமண மாலையும் கழுத்துமாக ஆனந்த்தை நோக்கி வசந்தமாளிகைக்கு வருகின்றனர். அப்போது விஷமருந்திய நிலையில் ஆனந்த் தெய்வாதீனமாக உயிர் பிழைக்க, மரணத்தையும் வென்று இருவரும் இணைகின்றனர்.
இந்திய சினிமா வரலாற்றில் காதலின் அடையாளமாக முத்திரை பதித்த படங்கள் பல. அதில் தேவதாஸ், அக்பர், லைலாமஜ்னு ,செம்மீன் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் பிரமாண்டமானதாக அமைந்தது
“வசந்தமாளிகை “.இதற்குப் பின் கமலஹாசனின் மரோசரித்ரா,ஏக் தூ ஜே கேலியே என சில காதல் காவிங்களை கூறலாம். எனினும் “வசந்தமாளிகை” எடுக்கப்பட்ட விதம் போல் வேறெந்த படமும் அமையவில்லை. ஏனெனில் இப்படத்தில் பங்களிப்பு கொண்ட அனைத்து கலைஞர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள்,கதைக்கேற்ப பின்னணி இசை வழங்கிய திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்,படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கேற்ப பாடல்கள் வரிகளை புனைந்த பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்,பாடல்களை உயிரைக் கொடுத்து அருமையாக பாடிய சௌந்தரராஜன்,சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி விறு விறுப்பாக கதைக்களம் அமைத்த கௌசல்யா தேவி,காட்சிகளுக்கமைய வசனம் எழுதிய பாலமுருகன்,மனதை நெருடும் வகையில் ஒளிப்பதிவு செய்த வின்சென்ட், நேர்த்தியாக ஜனரஞ்சகமாக படத்தை இயக்கிய.கே.எஸ்.பிரகாஷ்ராவ்,
எல்லாவற்றுக்கும் மேலாக படத்தை பிரமாண்டமாக தயாரித்த டி.ராமாநாயுடு(விஜயா சுரேஷ் கம்பைன்ஸ்) (தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் தந்தை).இவர்களின் மேலான கடும் உழைப்பில் உருவான “வசந்தமாளிகை” இன்றளவிலும் காலத்தால் அழியாத “காதல் மாளிகை”.தெலுங்கு படமான
“பிரேம் நகரி”ல் இறுதியில் கதாநாயகன்(நாகேஷ்வரராவ்) விஷம் குடித்து மரணிப்பதாக கதைக்களம் அமைத்த இதே கூட்டணி “வசந்தமாளிகை”யிலும் இவ்வாறே இறுதி காட்சியை அமைத்து படத்தை வெளியிட்டனர்.ஆனால் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்களால் இம்முடிவைத் ஜீரணிக்க இயலவில்லை. எனவே மீண்டும் படப்பிடிப்பு நடத்தி நாயகனை உயிர்ப்பிழைக்க வைத்து காதலர்கள் இணைவதாக முடிவை மாற்றியமைத்தனர்.
“பிரேம் நகரை”விட “வசந்தமாளிகை” வசூலில் பெரும் சாதனை படைத்தது.திரையிட்ட அனைத்து தென்னகத் திரையரங்குகளிலும் 300,250,200,150,100 நாட்கள் என கடந்து ஓடி சாதனை படைத்தது. இலங்கை கொழும்பில் 300 நாட்களும், யாழ்ப்பாணத்தில் 272 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. ஒரே ஒரு பிரதியை வைத்து கிங்ஸ்லி,கெப்பிட்டல் போன்ற திரையரங்குகளிலும்,இதே போல் யாழில்,ஓரே பிரதியை கொண்டு லிடோ,வெலிங்டன் திரையரங்குகளில் படத்தை 272 நாட்கள் வரையும் ஒட்டினர்.இலங்கை சினிமா வரலாற்றில் இதுவோர் தொழில் நுட்ப சாதனை என்றே கூறவேண்டும். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றளவிலும் ஜனரஞ்சகமானவைகள்.
மற்றும் படத்தில் போடப்பட்டுள்ள அமைப்புகள் (செட்) மிக பிரமாண்டம். மயக்கமென்ன பாடல் காட்சிக்காக அமைக்கப்பட்ட
அரங்க நிர்மாணங்கள் பிரமிப்பு மிக்கவை. அப்பாடலுக்கு முன் சிவாஜி பேசும் வசனங்கள் அபாரம்.மேலும்,நாயகன் மதுவுக்கு அடிமையானவன் என்பதை ஆரம்ப கட்டத்தில் உணர்த்தும் விதமாக, பறக்கும் விமானத்தில் நாயகன் பாடுவதாக கவிஞர் எழுதிய “ஓ மானிட ஜாதியே”,மற்றும்
“ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்”,
பெண்களுடன் உல்லாசம் கொள்வதை ,”குடிமகனே பெருங்குடி மகனே”,எனவும்,பெரிய மாளிகையில் நல்ல மனம் கொண்ட நாயகனை சரியாக புரிந்து கொள்ளாத சூழலை, “கலைமகள் கை பொருளே உனைக் கவனிக்க ஆளிலையோ” என நாயகனை வீணைக்கு உவமானம் செய்த வரிகள், காதலை வெளிப்படுத்திய பின் தான் கட்டிய “வசந்தமாளிகை”யை காட்டி “மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன” எனவும்,
காதலில் தோற்றவர்களுக்கு,”இரண்டு மனம் வேண்டும்” எனவும்,காதலிக்காக கட்டப்பட்ட அரண்மனை போன்ற பெரிய மாளிகை,அவள் தனக்கில்லை என்றானபின் அது எதற்கு என்பதை சோகத்துடன் சொல்லும் , “யாருக்காக இந்த மாளிகை வசந்தமாளிகை” போன்ற பாடல்கள் என்றும் காலத்தால் அழியாத கானங்கள்.இலங்கை வானொலியில் அக்காலத்தில் இப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பாகாத நாட்களே கிடையாது.”ஒலிச்சித்திரம்”என்ற ஒரு நிகழ்ச்சியில் இப்படத்தின் கதை வசனத்தை ஒரு மணிநேரம் ஒலிபரப்பு செய்வார்கள். இதன் கதை வசனத்தை ஒரு கூட்டமே ஒவ்வொரு குடும்பங்களில் வானொலி பெட்டியைச் சுற்றி அமர்ந்து செவிமடுக்கும்.
“ஒலிச்சித்திரம்”விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் அளிக்கும் “வசந்தமாளிகை”என இலங்கை வானொலியின் அபிமான நட்சத்திர அறிவிப்பாளர் அமரர் திருமதி ராஜேஷ்வரி ஷண்முகத்தின் தேமதுர குரல் ஒலிக்கும்.மேலும் கே.எஸ் ராஜா தொகுத்து வழங்கும் “திரைவிருந்து” நிகழ்ச்சி வாயிலாக ஓடாத படங்களையும் வெற்றியாக்கிய பெருமை கே.எஸ்.ராஜாவின் சிம்மக்குரலுக்குண்டு என்பதையும் சொல்லியாக வேண்டும்.அதே போல் “வசந்தமாளிகை” படத்தின் சாராம்சத்தையும் அழகாக இந்நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்கிய பாணியையும் என்றும் மறக்க முடியாது.
மேலும் இப்படத்தில் இடம்பெற்ற “அடியம்மா ராஜாத்தி”என்ற பாடல் படத்தின் நீளம் காரணமாகவும்,டப்பாங்குத்து வகையில் அமைந்ததற்காகவும்,படத்தின் மென்மையான போக்கை இப்பாடல் சிதைத்து விடும் என்ற எண்ணத்தினாலும் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டது.2019 இல்”வசந்தமாளிகை”
மீண்டும் 47 வருடங்களுக்குப் பின் டிஜிட்டல் வடிவில் வெளிவந்து 100 நாட்கள் கடந்து பல இடங்களில் ஓடிய அபார சாதனையை மீண்டும் படைத்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படம் “வசந்தமாளிகை” .இப்படத்தில் ஒவ்வொரு ஃபிரேம்களிலும் சிவாஜி கணேசன் தோன்றும் காட்சிகள் அழகோ அழகு. அவர் அணிந்திருக்கும் ஆடைகள்,கையில் அலங்காரமாகத் தொங்கும் கைச்செயின்,சிகரட்டையும்,மதுக்கிண்ணத்தையும் கையாளும் பாணி,ஜமீனுக்கேற்ற நடை, துடிப்பு நிறைந்த விழிகளால் பார்க்கும் பார்வை,மிடுக்கு நிறைந்த அபிநயம், சிகையலங்காரம், பாகம் பிரிக்கும் காட்சியில் தோன்றும் ஜமீன் பாரம்பரியம் மிக்க தலைப்பாகையுடன் கூடிய சிவப்பு நிற அலங்கார பட்டாடை,அமர்ந்திருக்கும் தோரணை, யாருக்காக பாடல் காட்சியில் அணிந்திருக்கும் வெள்ளை ஜிப்பா ஆடை,
இளநீல நிற சால்வை பாடல் அமைந்த விதம்,விஷம் அருந்தும் போதும்,மோதிரத்தை கழற்றி வைக்கும் போதும் அங்கு மாட்டப்பட்டிருக்கும் வாணிஸ்ரீயின் தத்ருபமான உருவப்படம். இரண்டு மனம் வேண்டும் பாடல் காட்சியில் மாடிப்படியில் சிகரட் பிடித்தவாறு நடந்து வரும் நடை,பாடிக்கொண்டே சிகரட் புகையை வாயிலும்,மூக்கிலும் விடும் ஸ்டைல்,வாணிஸ்ரீ படங்கள் அடங்கிய எல்பத்தை பார்க்கும் விதம் இவ்வாறு “வசந்தமாளிகை”யின் ஒவ்வொரு அறைகளையும் இல்லை இல்லை, ஒவ்வொரு காட்சிகளையும் வர்ணனை செய்து கொண்டே செல்லலாம்.இப்படத்தில் பணியாற்றிய மூவரின் அபார உழைப்பினை அவசியம் இவ்வுரையில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து ஜமீன் அரண்மனை காட்சிகள் வசந்தமாளிகையின் உட்புற,வெளிப்புற அமைப்புகள் அனைத்தும் தத்ரூபமாக அமையக்காரணமாகஇருந்தவர்களும், அரங்கநிர்மானங்களை(செட்) கலையம்சத்துடன் வடிவமைத்தவர்களும், மோல்டிங்ஸ் பணிகளை சிறப்பற அமைத்தவர்களுமான நீலகண்டன்,
எம்.கணபதி ஆச்சாரி,பி.ஜி. துரைராஜ் போன்றவர்களின் உழைப்பும்,திறமையும் இப்படத்தில் அபார பாராட்டுக்குரியது. அத்துடன் சிவாஜிக்கு ஒப்பனை செய்த ரங்கசாமி அவர்களையும் பாராட்டியாகவேண்டும்.பல படங்களில் சிவாஜியை மேலும் அழகாக காண்பித்தவர் சிவாஜியின் ஆஸ்தான ஒப்பனையாளர்
திரு.ரங்கசாமி அவர்களே.இக்கணியுகத்தில் “வசந்தமாளிகை” போன்ற ஓர் படத்தை யாராலும் உருவாக்க முடியாது என சவால் விட்டு சொல்லலாம்.அப்படியே ஓரளவு முயற்சி செய்தாலும் “ஆனந்த்”பாத்திரத்திரமேற்று நடிக்க சிவாஜிக்கு எங்கு செல்வது.மேலும் “வசந்தமாளிகை”யில் நடித்த அனைத்து நடிகைகளும் தன் பங்களிப்பை அருமையாக செய்துள்ளனர்.நாகேஷ்,வி.கே.ராமசாமி ‘ரமா பிரபாவின் நகைச்சுவை கட்டங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.பாலாஜியின் வில்லத்தனம் கம்பீரம்.கௌரவ வேடத்தில் ஒரேயொரு கட்டத்தில் தோன்றும் எஸ்.வி.ரங்காராவின் ஜமீன் தோற்றம் அசத்தல்.காதல் காட்சிகளில் சிவாஜியும்,வாணிஸ்ரீயும் தோன்றும் இடங்கள்
தெய்வீக காதலை வெளிப்படுத்துகின்றது. வாணிஸ்ரீயின் கழுத்தில் சிவாஜி முத்தமிடும் காட்சி அக்காலத்தில் எல்லா ஊடகங்கள்,பாட்டுப் புத்தகங்கள், மற்றும் போஸ்டர்களில் ஜனரஞ்சகமாக இடம்பெற்ற ஓர் பிரபலமான காட்சியாகும்.
இப்படத்தின் பின் பல படங்களில் கதாநாயகன் காதலில் தோற்றவனாக இருப்பின் ஓர் சால்வையை போர்த்திக்கொள்வான்.கையில் ஓர் மதுப்பாட்டிலையும்,சிகரட்டையும் வைத்துக்கொள்வான்.இடையிடையே ரத்த வாந்தி வேறு.இதற்கு கமலஹாசனின் “வாழ்வே மாயம்”படத்தையும்,மோகனின் “இதயக்கோவில்”படத்தையும் உதாரணமாக கூறலாம். “வசந்தமாளிகை” என்ற ஒரு மரத்தில் பல கிளைகள் கொண்ட காதல் படங்கள் பல பின்னாளில் தோன்றின.
அத்தனைக்கும் ஆணிவேராக இருந்தது “வசந்தமாளிகை “யே.இப்படத்தில் வாணிஸ்ரீயின் நடிப்பாற்றல் பெண்களை வெகுவாக கவர்ந்ததன.காரணம் வாணிஸ்ரீக்கு கிடைத்த பாத்திரம் பெண்களை மிகவும் கவர்ந்தது.சுயகௌரவம் மிக்க “லதா”பாத்திரம் வசந்தமாளிகையில் வெறும் அலங்கார பதுமையாக வந்து செல்லாமல் அப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த பாணி சிறப்புற அமைந்ததுமே இதன் வலுவான காரணம்.மற்றும் அலங்காரங்கள் இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டன. வாணிஸ்ரீ கொண்டை,வாணிஸ்ரீ பொட்டு,வசந்தமாளிகை வளையல்கள்,வசந்தமாளிகை சேலை, வசந்தமாளிகை கிளிப்புகள்,வசந்தமாளிகை பெயரில் வியாபார நிலையங்கள் என பல விடயங்கள் தோன்றி “வசந்தமாளிகை” படத்தின் புகழுக்கு கட்டியம் கூறி நின்றன. 1971 இல் தெலுங்கு படப்பிடிப்பின் போது போடப்பட்ட அதே செட்களை வைத்தே “வசந்தமாளிகை”யும் தயாரிக்கப்பட்டது.
நடிகர்கள்:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
வாணிஸ்ரீ,பாலாஜி,சுகுமாரி,நாகேஷ்,
வி.கே.ராமசாமி,
ஸ்ரீகாந்த்,சுந்தரராஜன்,
புஷ்பலதா,எஸ்.வி.ரங்காராவ்,
ராம்தாஸ், சாந்தகுமாரி, பண்டரிபாய்,
ரமா பிரபா,ஆர்.பார்த்திபன்,
குமாரி பத்மினி, டி.கே.பகவதி,சி.
கே.சரஸ்வதி,சகஷ்ரநாமம்,
வி.எஸ்.ராகவன்,செந்தாமரை,
ஸ்ரீதேவி (குழந்தை நட்சத்திரம்),
சி.ஐ.டி.சகுந்தலா,
எல்.காஞ்சனா மற்றும் பலர். பல யுகங்கள் கடந்தாலும் “வசந்தமாளிகை”போன்ற படங்கள் ரசிகர்கள் மனம் எனும் மாளிகைகளில் பூகம்பத்தாலும் அழியாத ஸ்த்திரமான மாளிகையாகும். “வசந்தமாளிகை”சிவாஜிக்கு 159 வது படமாகும். இப்படத்தின் வெற்றி சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை தந்திருந்தாலும்,சிவாஜி கணேசனுக்கு ஒரு சோகத்தை தந்தது, ஆம் “வசந்தமாளிகை” படப்பிடிப்பின் போதுதான் நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் அன்புத்தாயார் திருமதி ராஜாமணி அம்மையார் காலமானார்.
எனினும் படப்பிடிப்பை தயாரிப்பாளர் வேண்டுகோளின்படி தள்ளி வைக்காமல் தாய்க்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகள் அனைத்தையும் செய்து விட்டு படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்தார்.”